Sila Nerangalil Sila Manithargal Movie Review in Tamil

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Sila Nerangalil Sila Manithargal Movie Review in Tamil

சில நேரங்களில் சில மனிதர்கள் திரை விமர்சனம்

Producer – எஆர் என்டர்டெயின்மென்ட்
Director – விஷால் வெங்கட்
Music – ரதன்
Artists – அசோக் செல்வன், அபிஹாசன், பிரவீண் ராஜா, மணிகண்டன்
Release Date – 28 ஜனவரி 2022
Movie Time – 2 மணி நேரம் 20 நிமிடம்

உளவியில் ரீதியான கதையம்சம் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் வருவது அபூர்வம்தான். திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கு அம்சம்தான் என்றாலும் சில படங்கள் சில நேரங்களில் சில பாடத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கும். அந்த விதத்தில் வந்துள்ள ஒரு ‘மெச்சூர்டான’ படம்தான் இந்தப் படம்.

வாழ்க்கையின் வெவ்வேறு தளங்களில் சில தவறுகளைச் செய்து கொண்டிருக்கும் நான்கு இளைஞர்கள், விபத்தால் மரணமடையும் ஒருவரது வாழ்க்கையில் எப்படி சம்பந்தப்பட்டு, தங்களது தவறுகளை எப்படி உணர்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

மொபைல் போன் விற்கும் கடையில் வேலை பார்ப்பவர் அசோக் செல்வன். அவரது அப்பா நாசரிடம் எப்போதுமே கோபமாகப் பேசுபவர். தான் நினைப்பதை மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைப்பவர் அசோக் செல்வன். அசோக்கின் திருமணப் பத்திரிகை கொடுக்கும் வேலையை ஆரம்பிக்க நினைக்கிறார் நாசர். ஆனால், பிறகு போகலாம் எனப் பேசி அதைத் தடுக்கிறார் அசோக். மகன் பேச்சை மீறி திருமணப் பத்திரிகையைக் கொடுக்கச் செல்கிறார் நாசர். திரும்பும் வழியில் விபத்தில் மரணமடைகிறார். அவர் மீது கார் ஏற்றிக் கொல்பவர் சாப்ட்வேர் எஞ்சினியர் பிரவீண் ராஜா. சாலையில் விழுந்து கிடக்கும் நாசரைக் காப்பாற்ற நினைத்து விபத்துப் பழியை சுமப்பவர் நடிகர் அபிஹாசன். நாசரை கடைசியாக பைக்கில் ஏற்றி வந்து பாதி வழியில் இறக்கிவிடுபவர் மணிகண்டன். அசோக் செல்வன், அபிஹாசன், பிரவீண் ராஜா, மணிகண்டன் ஆகியோர் நாசர் மரணத்தினால் எப்படிப்பட்ட பாடத்தைக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் மீதிக் கதை.

தான் நினைப்பது மட்டுமே சரி, தான் செய்வது மட்டுமே சரி, தனது விருப்பத்தைத்தான் மற்றவர்களும் தொடர வேண்டும் என்ற அடங்காத எண்ணத்தில் இருப்பவராக அசோக் செல்வன்.

சென்டிமென்ட் எல்லாம் வாழ்க்கையில் தேவையே இல்லை, அழுகை எல்லாம் ஒரு உணர்வே இல்லை என நினைப்பவர் அபிஹாசன்.

வாழ்க்கையில் வசதியாக வாழ வேண்டும், ஒரு வாட்ச் வாங்கினால் கூட காஸ்ட்லியாக வாங்க வேண்டும் என பணத்தின் மிதப்பில் இருப்பவர் பிரவீண் ராஜா.

செய்யும் வேலையை ஏதோ கடமைக்குச் செய்தால் போதும், அதை விரும்பி, ரசித்து, மனப்பூர்வமாக செய்யத் தேவையில்லை என்று நினைப்பவர் மணிகண்டன்.

இப்படி நான்கு விதமான குணாதிசயங்கள் கொண்ட இளைஞர்கள் தாங்கள் செய்வது தவறு, தாங்கள் நினைப்பது தவறு என்பதை விதியின் காரணமாக நாசரின் மரணத்தில் சம்பந்தப்பட்டு எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட் சிறப்பாகக் கையாண்டு, தெளிவான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள் மூலம் நம்மையும் உணர வைக்கிறார்.

படத்தில் வரும் இந்த நான்கு கதாபாத்திரங்கள் போல நம்மில் யாராவது ஒருவர் இருக்கலாம் அல்லது நமக்குத் தெரிந்தவர்கள், நம்முடன் நெருங்கிய உறவு, நட்பில் இருப்பவர்களும் இருக்கலாம். அப்படி இருப்பவர்களுக்கு இந்தப் படம் புரிய வைக்கும் இந்தப் பாடம் சில மனிதர்களுக்குப் புரிந்து அவர்கள் யோசிக்க ஆரம்பித்தாலே போதும், அது இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றி.

கீழ்தட்டு நடுத்தரக் குடும்பத்து இளைஞனாக அசோக் செல்வன், நுனிநாக்கு ஆங்கிலத்தில் அடிக்கடி ‘ஷிட், ஷிட்’ எனப் பேசி ஹை-பை இளைஞனாக அபிஹாசன், எப்போதுமே பந்தா பண்ணும் இளைஞனாக பிரவீண் ராஜா, என்னடா வாழ்க்கை இது அடிக்கடி சலித்துக் கொள்ளும் இளைஞனாக மணிகண்டன் என நால்வருமே அவரவர் கதாபாத்திரங்களில் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.

அசோக் செல்வன் காதலியாக ரேயா. வருங்கால மாமனார் நாசரின் இறுதிச்சடங்கின் போது, காதலனின் தவறைச் சுட்டிக்காட்டி பேசும் காட்சியில் தனது பேச்சாலேயே அசோக்கின் ஆணவத்திற்கு அறை விட்டது போல பேசுகிறார். அது போலவே, கணவர் பிரவீண் ராஜாவின் தவறை காரில் செல்லும் போது ரித்விகா, சுட்டிக்காட்டிப் பேசும் காட்சியும் அமைந்துள்ளது. மனைவியரின் பேச்சைக் கேட்க மறுக்கும் கணவன்களுக்கு ‘பளீர்’ என புத்தி புகட்டுகிறார்கள்.

நாசரின் நடிப்பில் அவரது அனுபவம் முத்திரை பதிக்கிறது. தாயில்லாமல் வளர்ந்த தனது மகனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் அப்பாவாக கண் கலங்க வைக்கிறார். அபிஹாசனின் சினிமா கதாநாயகியாக அஞ்சு குரியன், அதிக வேலையில்லை. அபியின் அப்பாவாக சினிமா இயக்குனராக கேஎஸ் ரவிக்குமாருக்கும் அதிக காட்சிகள் இல்லை. பானுப்ரியா, இளவரசு சில காட்சிகளே என்றாலும் மனதில் நிற்கிறார்கள்.

ரதன் இசையில் உணர்வு பூர்வமான இசை. மெய்யேந்திரனின் கதையை மீறாத காட்சிப்பதிவு. பெலிக்ஸ் ராஜா, மனோஜ்குமாரின் அரங்க அமைப்பு ஆகியவை பாராட்ட வைக்கின்றன.

இடைவேளைக்குப் பிறகு கொஞ்ச நேரம் வரும் சில தடுமாற்றம் தவிர ஒரு நிறைவான படத்தைப் பார்த்த திருப்தி.

Reference: Cinema Dinamalar