செல்ஃபி,Selfie

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் செல்ஃபி படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Selfie Movie Review in Tamil

செல்ஃபி திரை விமர்சனம்

Production – டிஜி பிலிம் கம்பெனி
Director – மதிமாறன்
Music – ஜிவி பிரகாஷ்குமார்
Artists – ஜிவி பிரகாஷ்குமார், வர்ஷா பொல்லம்மா, கௌதம் மேனன்
Release Date – 1 ஏப்ரல் 2022
Movie Running Time – 2 மணி நேரம் 11 நிமிடம்

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை என தாராளமாகச் சொல்லலாம். ஆனால், சொல்லிய விதம்தான் தெளிவாக இல்லை. படத்தின் ஆரம்பத்திலேயே எதைப் பற்றிய படம் என்பதைத் தெளிவான காட்சிகளுடன் சொல்லியிருக்கலாம். துண்டு துண்டு காட்சிகளாக அடுத்தடுத்து மாறும் காட்சிகளால் என்ன நடக்கிறது என்ற ஒரு குழப்பம் ஆரம்பத்திலேயே வந்து விடுகிறது. அரை மணி நேரம் கடந்த பிறகே படத்துக்குள் நுழைய முடிகிறது. அது போலவே கிளைமாக்சையும் சட்டென முடித்துவிட்டார்கள். ஆரம்பத்தையும், முடிவையும் சரி செய்திருந்தால் தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இப்படம் அமைந்திருக்கும்.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் ‘மேனேஜ்மென்ட் சீட்’ என அழைக்கப்படும் இடங்களுக்காக எப்படி நன்கொடை (?) வசூலிக்கிறார்கள். யார் யாரெல்லாம் அதில் ஈடுபடுகிறார்கள், என்னவெல்லாம் நடக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாகக் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மதி மாறன். ஒரு புதிய களத்தை எடுத்துக் கொண்டதற்காக அவரைப் பாராட்டலாம்.

ஒரு சாதாரண இஞ்சினியரிங் கல்லூரியில் அப்பாவின் வற்புறுத்தலால் இஞ்சினியரிங் படித்து வருகிறார் ஜிவி பிரகாஷ்குமார். படிக்கும் போதே சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டு புகழ் பெற்ற ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ‘மேனேஜ்மென்ட் சீட்’டிற்கு மாணவர்களைப் பிடித்து தரும் ‘புரோக்கர்’ வேலையை நண்பர்களுடன் சேர்ந்து செய்ய ஆரம்பிக்கிறார். அதில் ஒரு பெரும் சிக்கல் ஏற்பட ஜிவியின் நெருங்கிய நண்பன் ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறார். இருப்பினும் மீண்டும் அந்த ‘புரோக்கர்’ வேலையில் இறங்கி நண்பன் குடும்பத்திற்கு உதவ நினைக்கிறார். இதனால், அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் படத்தின் மீதிக் கதை.

சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாகப் பேசப்பட்ட ஒரு தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட கதையோ என படம் யோசிக்க வைக்கிறது. அந்த அளவிற்கு கல்லூரி வட்டாரங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி கைதானவர் அவர். அவரது கதாபாத்திரத்தில்தான் கவுதம் மேனன் நடித்திருக்கிறார். அந்த தனியார் மருத்துவக் கல்லூரியின் முக்கியமான புரோக்கர் கதாபாத்திரத்தில் கவுதம் மேனன். சமீப காலமாக தமிழ் சினிமாவில் சில ‘யுனிக்’ ஆன கதாபாத்திரங்களில் நடிக்க கவுதம் மேனனைத்தான் இயக்குனர்கள் தேர்வு செய்கிறார்கள். அவர்களது தேர்வுக்கு ஏற்றபடி சரியாக நடித்துக் கொடுக்கிறார் கவுதம். இந்தப் படத்திலும் அப்படியே.

இஞ்சினியரிங் கல்லூரி மாணவர் கனல் கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷ்குமார். அவரைக் கல்லூரி மாணவர் என்று சொன்னால் நம்ப முடிகிறது. தன்னை விட அனுபவம் வாய்ந்த ஒருவரை எதிர்க்கும் துணிச்சல் கொண்ட ஒரு கதாபாத்திரம். வழக்கமாக தமிழ் சினிமாவில் கல்லூரி மாணவர்களை காதலனா, ரவுடியாக மட்டுமே காட்டுவார்கள். இந்தப் படத்தில் வித்தியாசமாக ஒரு புரோக்கர் ஆகக் காட்டியிருக்கிறார்கள். அசால்ட்டான ஒரு கதாபாத்திரத்தில் அசால்ட்டாய் நடித்திருக்கிறார் ஜிவி.

படத்தின் நாயகி வர்ஷா பொல்லம்மாவுக்குப் பெரிய வேலையில்லை. அடிக்கடி ஜிவியைத் தேடிச் சென்று கொஞ்சமாகக் காதலித்துவிட்டுப் போகிறார். ஜிவியின் நண்பனாக குணாநிதி. கொஞ்ச நேரமே வரும் கதாபாத்திரம் என்றாலும் பரபரப்பாக நடித்து அதே பரபரப்புடன் படத்தில் தன் முடிவையும் தேடிக் கொள்கிறார். ஜிவியின் அப்பாவாக சந்திரசேகர். தன் மகன்கள், மகள்கள் படிப்பு, வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று கனவு காணும் சராசரி அப்பாவாக கண் கலங்க வைக்கிறார்.

தன் படத்திற்கே ஹிட் ஆகாத பாடல்களை ஜிவி பிரகாஷ் கொடுத்தது ஏனோ ?. குட்டிக் குட்டி இடங்களில் கூட விஷ்ணு ரங்கசாமியின் கேமரா புகுந்து இயல்பான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இளையராஜாவின் படத் தொகுப்பு படத்தின் ஆரம்ப அரை மணி நேரக் காட்சிகளை தெளிவாகத் தொகுத்து கொடுத்திருக்க வேண்டும். ‘பாஸ்ட் கட்டிங்’ என கொஞ்சம் குதறி வைத்திருக்கிறார்.

பல பெற்றோர்களுக்கு ஒரு முக்கியமான பாடமாக அமைய வேண்டிய படம். கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் அந்தப் பாடம் இன்னும் பிரமாதமாக வந்திருக்கும். சில பக்கங்களை இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாம்.

Reference: Cinema Dinamalar