ராதே ஷ்யாம்,Radhe shyam

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் ராதே ஷ்யாம் படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Radhe Shyam Movie Review in Tamil

ராதே ஷ்யாம் திரை விமர்சனம்

Production – யுவி கிரியேஷன்ஸ், டி சீரிஸ் பிலிம்ஸ்
Director – ராதாகிருஷ்ணகுமார்
Music – ஜஸ்டின் பிரபாகரன், தமன்
Artists – பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ்
Release Date – 11 மார்ச் 2022
Movie Running Time – 2 மணிநேரம் 18 நிமிடம்

தெலுங்கில் மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், நாகார்ஜுனா, கிரிஜா நடிப்பில் 1989ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘கீதாஞ்சலி’. தமிழில் ‘இதயத்தை திருடாதே’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இங்கும் வெற்றி பெற்றது.

அந்தப் படத்தின் சற்றேறக்குறைய ‘உல்டா’ தான் இந்த ‘ராதேஷ்யாம்’. இயக்குனர் ராதாகிருஷ்ணகுமார் அல்லது பிரபாஸ் ஆகியோர் அந்த ‘கீதாஞ்சலி’யைப் பார்த்து ரொம்பவே ‘இம்ப்ரஸ்’ ஆகியிருக்கலாம். எனவே, அந்தப் படத்தையே ‘இன்ஸ்பிரேஷன்’ ஆக வைத்து இந்த ‘ராதேஷ்யாம்’ படத்தை உருவாக்கியிருக்கி இருக்கிறார்கள் போலிருக்கிறது.

70களில் நடக்கும் கதை. வெளிநாடுகளிலும் புகழ் பெற்ற கைரேகை நிபுணர், இத்தாலியின் ரோம் நகரில் வசிக்கும் பிரபாஸ், தன்னுடைய வாழ்க்கை எதுவரை என்று அவரே கணித்து வைத்திருக்கிறார். அதே ரோம் நகரில் டாக்டர் ஆக இருப்பவர் பூஜா ஹெக்டே. மருந்தே கண்டு பிடிக்க முடியாத வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய வாழ்நாள் அறுபதே நாட்கள்தான் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். ஒரு அழகான சந்திப்பில் பிரபாஸ், பூஜா தங்கள் மனதைப் பறி கொடுக்கிறார்கள். தங்கள் எதிர்காலம் பற்றி மருத்துவ ரீதியாகத் தெரிந்தவரும்,, ஜோதிடம் ரீதியாகத் தெரிந்தவரும் காதலில் விழுகிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை காதல் மட்டுமே, காதலைத் தவிர வேறொன்றமில்லை. அற்புதமான வெளிநாடு லொகேஷன்கள், அதில் இரண்டறக் கலந்த கிராபிக்ஸ் காட்சிகள் என ஒரு விஷுவல் பியூட்டியாக படத்தைக் கொடுப்பதில் மட்டும் இயக்குனர் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். அதற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நிறையவே கை கொடுத்திருக்கிறார். அதிலும், பிரபாஸ், பூஜா முதலில் சந்திக்கும் அந்த ரயில் காட்சியில் காமிரா சுற்றிச் சுழன்று படமாக்கி வியப்பூட்டுகிறது. கண்களுக்கு இதமாக, குளிர்ச்சியாக படத்தைக் கொடுக்க நினைத்தவர்கள் மனதுக்கு இதமாகவும் படத்தைக் கொடுக்க இன்னும் கூடுதலாய் யோசித்திருக்கலாம்.

பாகுபலி, சாஹோ என வந்த அடுத்தடுத்த பான்–இந்தியா படங்களில் பிரபாஸை ஆக்ஷன் ஹீரோவாகப் பார்த்தவர்கள், இந்தப் படத்தில் ரொமான்ஸ் ஹீரோவாக மட்டுமே பார்க்க முடியும். கைரேகை நிபுணராக காதல் நடிப்பிலும் கை தேர்ந்தவராக நடித்திருக்கிறார் பிரபாஸ். கிளைமாக்சில் மட்டுமே ஆக்ஷன் ஹீரோ பிரபாஸுக்கு ஒரு வேலை கொடுக்க வேண்டுமென நம்ப முடியாத காட்சியாக இருந்தாலும் பிரம்மாண்டமான ஆக்ஷனை வைத்திருக்கிறார் இயக்குனர்.

பிரேர்னா, வித்தியாசமான கதாபாத்திரப் பெயர் பூஜா ஹெக்டேவுக்கு. பிரேம் பை பிரேம் தன்னுடைய அழகால் வசீகரிக்க வைக்கிறார். அவருக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளும், அவரை அழகாகக் காட்ட உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பெயர் வாங்கித் தரும் அளவிற்கு பியூட்டியாக நடித்திருக்கிறார் பூஜா.

படத்தில் மற்ற கதாபாத்திரங்களுக்கு அதிக வேலையும் இல்லை, முக்கியத்துவமும் இல்லை. பிரபாஸ் அம்மாவாக ‘மைனே பியார் கியா’ கதாநாயகி பாக்யஸ்ரீ, சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். பூஜாவின் பெரியப்பாவாக நடித்திருக்கும் சச்சின் கெட்கர், பிரபாஸின் குருவாக நடித்திருக்கும் சத்யராஜ் ஆகிய இருவருக்குத்தான் மற்ற கதாபாத்திரங்களில் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். கப்பல் கேப்டன் ஆக சில காட்சிகளில் வந்து போகிறார் ஜெயராம். படத்தில் நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் என மருந்துக்குக் கூட கிடையாது.

ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா பாடியிருக்கும் ‘யாரோ யார் அவளோ…’ பாடலும், சித் ஸ்ரீராம் பாடியுள்ள, ‘திரையோடு தூரிகை…’ கதையோடு ஒன்றிணைந்து ரசிக்க வைக்கிறது. தமனின் பின்னணி இசை காதலுடன் கை கோர்க்கிறது.

நாயகன் நாயகி இருவருக்கும் இடையில் என்ன பிரச்சினை என்பது தெரிந்த பின் படத்தின் மீதான சுவாரசியம் குறைந்து விடுகிறது. அவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்களா, மாட்டார்களா என்ற பதைபதைப்பு, பரபரப்பு உணர்வுபூர்வமாக திரைக்கதையில் இடம் பெறவில்லை. படத்தின் மேக்கிங்கிற்காகவும், பிரபாஸ், பூஜாவின் நடிப்பிற்காகவும் மட்டும் படத்தைப் பார்க்கலாம்.

Reference: Cinema Dinamalar