பூ சாண்டி வரான்,Poo chandi Varaan

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் பூ சாண்டி வரான் படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Poochandi Varaan Movie Review in Tamil

பூ சாண்டி வரான் திரை விமர்சனம்

Production – திரியும் ஸ்டுடியோ
Director – ஜேகே விக்கி
Music – டஸ்டின் ரிதுவான் ஷா
Artists – மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், ஹம்சினி பெருமாள்
Release Date – 1 ஏப்ரல் 2022
Movie Running Time – 1 மணி நேரம் 55 நிமிடம்

தமிழ்த் திரைப்படங்கள் தமிழகத்தைத் தாண்டியும் மலேசியாவில் அவ்வப்போது தயாராகி அங்கு வெளியாகிறது. அவற்றில் ஒரு சில படங்கள் இந்தியாவிலும் வெளியாகும். அப்படி இன்று வெளியாகும் படம் தான் இந்த ‘பூ சாண்டி வரான்‘.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரே ஒரு நடிகரைத் தவிர மற்ற அனைவருமே மலேசிய நடிகர்கள், நடிகைகள் தான். நமக்கு யாரென்றே தெரியாத அவர்கள் நடித்த படம் ஒன்றை சுவாரசியமாக ரசிக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் படத்தின் இயக்குனர் ஜேகே விக்கி. ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

பேய், அமானுஷ்யம் பற்றி நேரடியாகச் சென்று விசாரித்து பத்திரிகையில் கட்டுரை எழுதுபவர் மிர்ச்சி ரமணா. மலேசியாவிற்குச் சென்றும் அது பற்றி விசாரிக்கிறார். அப்போது அவர் தினேஷ் சாரதி கிருஷ்ணனை சந்திக்கிறார். தினேஷ் தனக்கும் தனது நண்பர்களுக்கும் நடந்த ஒரு சம்பவம் பற்றி கூறுகிறார். தனது நண்பர்களான லோகன் நாதன், கணேஷன் மனோகரன் ஆகியோருடன் சேர்ந்து பழங்கால நாணயம் ஒன்றை வைத்து ஆவிகளுடன் பேசுகிறார் தினேஷ். அப்போது மல்லிகா என்ற ஒரு ஆவி வருகிறது. அதன்பின் நடக்கும் சில சம்பவங்களால் மல்லிகா ஆவி, கணேஷன் மனோகரனைக் கொன்று விடுகிறது. அந்த சம்பவம் பற்றி ரமணாவிடம் சொன்ன தினேஷ், அந்த நாணயத்தில்தான் ஏதோ ஒரு விவகாரம் இருக்கிறது என்று கூகிறார். அது என்ன என்பதைக் கண்டுபிடிக்க ரமணா, தினேஷ், லோகன் முயற்சிக்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இரண்டு மணி நேரப் படத்தை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் பரபரப்பாக நகர்த்தியிருக்கிறார் விக்கி. தமிழில் ஏற்கெனவே நிறைய பேய்க் கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இதில் சில வரலாற்று விஷயங்களைச் சொல்லி, அடுத்து என்ன நடக்கும் என்ற ஒரு ஆர்வத்தையும் திரைக்கதையில் ஏற்படுத்தியிருக்கிறார்.

படத்தில் நடித்திருக்கும் அனைவருக்குமே சரியான முக்கியத்துவம் இருக்கிறது. பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதும் பத்திரிகையாளராக மிர்ச்சி ரமணா, ஆவிகளுடன் பேசுபவராக தினேஷ் சாரதி கிருஷ்ணன், அவரது மாற்றுத்திறனாளி நண்பராக லோகன் நாதன், ஆவியால் கொல்லப்படும் நண்பராக கணேஷன் மனோகரன். இவர்கள் மூவரது நடிப்பும் நிஜமான நண்பர்களைப் போல திரையில் வெளிப்படுகிறது. ஒருவர் மீது மற்றொருவர் கோபப்படுவது, கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொள்வது, சிக்கல் வரும் போது மற்றவரைக் காப்பாற்ற நினைப்பது என நண்பர்களாகவே மாறியிருக்கிறார்கள்.

ஆவியாக வந்து மிரட்டுவது மல்லிகா என்று தெரியவர அந்த இறந்து போன மல்லிகா யார் என்று தேடிப் போகிறார்கள். ஆனால், அங்கு மல்லிகா உயிருடன் இருப்பது ஆச்சரியமான திருப்புமுனை. அதற்குப் பிறகு மல்லிகா தரும் தகவல்கள், அவரது அனுபவங்கள் படத்தை வேறொரு தளத்திற்குக் கொண்டு செல்கிறது. மல்லிகாவாக ஹம்சினி பெருமாள் இயல்பாய் நடித்திருக்கிறார்.

படத்தில் பாடல்கள் கிடையாது. டஸ்டின் ரிதுவான் ஷா பின்னணி இசையில் பரபரப்பை மேலும் கூட்டியிருக்கிறார். இரவு நேரக் காட்சிகள்தான் படத்தில் அதிகம். மிரட்டலான லைட்டிங்குடன் திரையிலும் பரபரப்பை சேர்த்திருப்பதில் ஒளிப்பதிவாளர் அசலிஷம் பின் முகம்மது அலிக்கும் முக்கிய பங்குண்டு.

வெறுமனே ஆவி, பேய், அமானுஷ்யம் என்று சொல்லி வழக்கமான தமிழ்ப் படங்களைப் போல ஏமாற்றாமல் வித்தியாசமாகக் கொண்டுக்க வேண்டும் என்று இப்படக்குழு முயற்சித்திருப்பதற்கு பாராட்டியே ஆக வேண்டும். படத்திற்கு பெரிய பட்ஜெட் ஆகியிருக்காது என்று படம் பார்க்கும் போதே தெரிகிறது. ஆனால், சிறிய பட்ஜெட்டில் நிறைவான படத்தைக் கொடுக்கலாம் என்று இந்த மலேசியக் குழுவினரைப் பார்த்து சிறிய பட்ஜெட் படங்களை எடுக்கும் தமிழ் சினிமா படைப்பாளிகள் கற்றுக் கொள்ளலாம்.

Reference: Cinema Dinamalar