பொன்னியின் செல்வன்,Ponniyin Selvan

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Ponniyin Selvan Movie Review in Tamil

பொன்னியின் செல்வன் விமர்சனம்

Ponniyin Selvan Movie Production – லைக்கா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ்
Ponniyin Selvan Movie Director – மணிரத்னம்
Ponniyin Selvan Movie Music Director – ஏஆர் ரஹ்மான்
Ponniyin Selvan Movie Artists – விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி
Ponniyin Selvan Movie Release Date – 30 செப்டம்பர் 2022
Ponniyin Selvan Movie Running Time – 2 மணி நேரம் 47 நிமிடம்

தமிழ் சினிமாவில் சரித்திரப் படங்கள் வந்து வெகு காலமாகிவிட்டது. தெலுங்கிலிருந்து ‘பாகுபலி’ படம் வந்த பின் தமிழ் ரசிகர்களுக்கும் அதைப் போல, அதை விடச் சிறந்த ஒரு படம் தமிழிலும் வராதா என்ற ஏக்கம் இருந்தது. அதை முற்றிலுமாகத் தீர்த்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்‘ நாவலைப் படித்தவர்களுக்கு அந்த நாவலை திரைப்படமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழும். அவரவர் கற்பனையில் ஒரு சில நடிகர்கள், நடிகைகளை உருவகப்படுத்தி இருந்திருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஏற்கும் விதமாக கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நட்சத்திரத் தேர்வைச் செய்திருக்கிறார் மணிரத்னம்.

கதை நடக்கும் அந்தக் காலம் இப்படித்தான் இருந்திருக்குமோ என்ற கற்பனைக்கு படக்குழுவினர் அனைவருமே உயிர் கொடுத்திருக்கிறார்கள். VFX, CG என தொழில்நுட்பங்கள் அதிகம் இல்லாமல் கதைக்குத் தேவைப்படும் விதத்தில் பல இடங்களைத் தேடிக் கண்டுபிடித்து படமாக்கி இருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு அற்புதமான சரித்திரப் படத்தை, ஒரு வரலாற்றைப் பார்க்கப் போகிறோம் என்று படத்திற்குச் சென்றால் திரையில் உங்களுக்கு ஒரு அதிசயம் நிச்சயம் காத்திருக்கும்.

சோழ மன்னர் சுந்தர சோழர் நோய் வாய்ப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். அவரது மூத்த மகன் ஆதித்த கரிகாலன் வடக்கில் தங்களது சோழ சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த போர் புரிந்து வருகிறார். மகள் குந்தவை தனது நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இளைய மகன் அருண்மொழி வர்மன் இலங்கையில் போர் புரிந்து சோழக் கொடியை அங்கு பறக்க வைக்கிறார். இந்நிலையில் சுந்தர சோழரிடமிருந்து ஆட்சி அதிகாரம் அவரது மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு செல்லக் கூடாது என நிதி அமைச்சர் பழுவேட்டரையர் சிற்றரசர்களுடன் சேர்ந்து ஆலோசித்து சுந்தர சோழரின் பெரியப்பா மகன் மதுராந்தகனை சோழ அரசராக நியமிக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

இது பற்றி அறிந்து தன் தங்கை குந்தவைக்கும், அரசருக்கும் சொல்ல வேண்டும் என தனது நண்பன் வந்தியத் தேவனை தூது அனுப்புகிறார் ஆதித்த கரிகாலன். இதனிடையே, பாண்டிய மன்னனைக் கொன்றதால் ஆதித்த கரிகாலனையும், சோழ சாம்ராஜ்ஜியத்தையும் அழிக்க பாண்டிய மன்னனின் படையினர் சபதமெடுக்கிறார்கள். பழுவேட்டரையரின் மனைவியும், ஆதித்த கரிகாலனின் முன்னாள் காதலியுமான நந்தினியும் சோழ சாம்ராஜ்ஜியத்தின் அரியணை மீது ஆசைப்படுகிறார். இப்படிப்பட்ட சூழலில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்த முதல் பாகத்தின் சுருக்கமான கதை.

நாவலைப் படிக்கும் போது மனதுக்குள் ஒரு ‘பிரம்மாண்டம்’ உருவாகும். அதை நாமும் ஒரு காட்சிப்படுத்திப் பார்ப்போம். அதே அளவுக்கு இந்தப் படத்திலும் அப்படி ஒரு பிரம்மாண்டத்தை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். நாம் பார்ப்பது ஒரு தமிழ்த் திரைப்படம்தானா என்ற வியப்பு நிச்சயம் ஏற்படும். போர் நடக்கும் களங்கள், தஞ்சை அரண்மனை, பழையாறை அரண்மனை, இலங்கைத் தீவு, கடல் என படம் முழுவதும் பிரம்மாண்டம் பரவி இருக்கிறது.

கதாபாத்திரங்களும், அதற்கான நடிகர்கள், நடிகைகளும் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். அந்த அளவிற்குப் பொருத்தமானத் தேர்வு. இந்த முதல் பாகத்தில் முடிந்த வரையில் அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சிறப்பான காட்சிகள் ஒன்றாவது அமைய வேண்டும் என அதற்கேற்றபடியும் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.

வந்தியத் தேவனாக கார்த்தி, அந்தக் கதாபாத்திரத்திடம் எப்போதுமே ஒரு குறும்பு இருக்கும். அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் கார்த்தி. நந்தினி ஐஸ்வர்யா ராயை சந்திக்கும் காட்சி, குந்தவை த்ரிஷாவை சந்திக்கும் காட்சி, பூங்குழலி ஐஸ்வர்ய லட்சுமியை சந்திக்கும் காட்சிகளில் உள்ள அந்த காதல் குறும்பு அடடா…அவ்வளவு சுவாரசியம். வீரத்திலும் சளைத்தவரில்லை என சண்டையிலும் அசத்துகிறார்.

ஆதித்த கரிகாலனாக விக்ரம். நந்தினியைக் காதலித்து ஏமாந்த சோகம், வெறுப்பு. வயதான பழுவேட்டரையருக்கு மனைவியாக முன்னாள் காதலி தஞ்சையில் இருப்பதால் அங்கு வரவே மாட்டேன் என கோபப்படுகிறார். காதல் தவிப்பையும், காதலி மீதான வெறுப்பையும், எதிரிகளை வீழ்த்தும் வீரத்திலும் விக்ரமின் நடிப்பு ஆஹா, ஒஹோ.

அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி. படத்தில் இடைவேளைக்குப் பின்பே வருகிறார். அதன்பின் அவரைச் சுற்றித்தான் கதை நகர்கிறது. இந்த முதல் பாகத்தில் அவரது வீரமும், தந்தை மீதும், நாடு மீதும் உள்ள பாசமும் காட்டப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் இவர் படம் முழுவதும் வருவார்.

இளவரசி குந்தவை ஆக த்ரிஷா. அப்பா, அண்ணன், தம்பி, நாடு, நாட்டு மக்கள் என எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம். எதிரிகளின் சூழ்ச்சியை அறிந்து அதற்கேற்றபடி புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளும் விதம். பட அறிவிப்பின் போது குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷாவா என யோசித்தவர்கள் படம் பார்த்தபின் அவரைவிட பொருத்தமானவர் யாருமில்லை எனச் சொல்வார்கள்.

நந்தினி ஆக ஐஸ்வர்யா ராய். சூழ்ச்சியின் மொத்த உருவம் பேரழகி வடிவில் இப்படித்தான் இருக்குமோ என தனது நடிப்பால் வியக்க வைக்கிறார் ஐஸ்வர்யா ராய். தன்னை விட வயதில் அதிகமான பழுவேட்டரையரை திருமணம் செய்து கொண்டவர். பழுவேட்டரையராக சரத்குமார். தனது அழகால் அவரை அடிமையாக்கி, தனக்கு வேண்டியவற்றை சாதித்துக் கொள்ளும் சூழ்ச்சிக்காரி. ஐஸ்வர்யாவும், த்ரிஷாவும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் நாவலில் எழுதப்பட்ட விதத்திற்கு அப்படியே உயிர் கொடுத்திருக்கிறது.

பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன். சோழ அரசுடன் இருந்து சதிகாரர்களுக்குத் துணை புரியும் வில்லன்கள். சுந்தர சோழராக பிரகாஷ்ராஜ், ஒற்றனாக வைணவத்தின் பெருமை பேசும் ஆழ்வார்க்கடியானாக ஜெயராம், பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, பெரிய வேளார் ஆக பிரபு, பாண்டிய படையின் தலைவனாக கிஷோர், மதுராந்தகன் ஆக ரகுமான், பூங்குழலி ஆக ஐஸ்வர்ய லட்சுமி, அருண் மொழி வர்மனைக் காதலிக்கும் கொடும்பாளூர் இளவரசி வானதி ஆக சோபிதா துலிபாலா, சேந்தன் அமுதன் ஆக அஷ்வின் என மற்ற கதாபாத்திரங்களுக்குமான தேர்வும் அவர்களின் நடிப்பும் பொருத்தம்.

ஏஆர் ரஹ்மான் இசை இந்தப் படத்தை உலகத் தரத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. ஹாலிவுட் படங்களில் நாம் பார்த்து வியந்த இசையை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். படத்தில் சில பாடல்கள் முழுமையாக இடம் பெறாமல் போவது வருத்தமே.

ரவிவர்மனின் ஒளிப்பதிவு பற்றி எவ்வளவு பாராட்டினாலும் தகும். VFX மூலம் கூட இவ்வளவு அழகியலைக் காட்டியிருக்க முடியாது. தனது லைட்டிங்காலும், கேமரா கோணங்களாலும் படத்தின் பிரம்மாண்டத்தை ஒவ்வொரு பிரேமிலும் காட்டியிருக்கிறார்.

‘பொன்னியின் செல்வன்’ நாவலை இரண்டு பாகங்களுக்குள் படமாக்குவது என்பது கூட எளிதல்ல. இந்த முதல் பாகத்தில் ஒரு படமாக அந்த நாவலை எந்த அளவிற்கு சுருக்கி சிறப்பாகத் தர முடியுமோ அதை சரியாகச் செய்திருக்கிறார் மணிரத்னம். நாவலை இதுவரையில் முழுவதுமாக படிக்காதவர்கள் நாவலின் கதைச் சுருக்கத்தையாவது படித்துவிட்டு வந்தால்தான் படத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு பார்க்க முடியும். இல்லையென்றால் படத்திற்குள் செல்ல அவர்களுக்கு சிறிது நேரம் தேவைப்படும். ஒரு முறை பார்த்தால் மட்டும் போதாது மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் ஒரு படமாக இந்தப் படம் இருக்கும். இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக முதல் பாகத்தை முடித்திருக்கிறார்கள்.

Reference: Cinema Dinamalar