மை டியர் பூதம்,My Dear Bootham

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் மை டியர் பூதம் படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

My Dear Bootham Movie Review in Tamil

மை டியர் பூதம் திரை விமர்சனம்

Production – அபிஷேக் பிலிம்ஸ்
Director – ராகவன்
Music – இமான்
Artists – பிரபுதேவா, ரம்யா நம்பீசன், மாஸ்டர் அஷ்வத்
Release Date – 15 ஜுலை 2022
Movie Running Time – 2 மணி நேரம் 4 நிமிடம்

குழந்தைகளுக்கான படங்கள் தமிழ் சினிமாவில் அதிகமாக வருவதே இல்லை. எப்போதோ ஒரு முறைதான் அப்படியான படங்கள் வரும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சுவாரசியமான குழந்தைகள் படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகவன்.

‘மஞ்சப் பை, கடம்பன்’ ஆகிய தன்னுடைய முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் விலகி இப்படி ஒரு படத்தை ராகவன் கொடுத்திருப்பது ஆச்சரியம்தான். கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் துணையுடன் குழந்தைகள் ரசித்து மகிழும் படமாக இந்தப் படம் இருக்கிறது.

திக்கித் திக்கிப் பேசும் குறையுடயவர் மாஸ்டர் அஷ்வத். அவரது அம்மா ரம்யா நம்பீசன். கணவர் இல்லாத குறை தெரியாமல் மகன் அஷ்வத் மீது மிகவும் பாசமாக இருக்கிறார். ஒரு நாள் பள்ளி சுற்றுலா சென்ற போது 3000 வருடங்களாக சித்தர் ஒருவரின் சாபத்திற்கு ஆளாகி பூமியில் சிலையாக இருக்கும் பூத லோகத்தின் தலைவர் பிரபுதேவாவிற்கு உயிர் கொடுக்கிறார் அஷ்வத். இருவரும் பின்னர் நண்பர்களாகிவிடுகிறார்கள். 48 நாட்களுக்குள் ஒரு மந்திரத்தை சொன்னால் மட்டும்தான் பிரபுதேவா மீண்டும் பூதலோகம் செல்ல முடியும், இல்லை என்றால் காற்றோடு காற்றாக கலந்து மறைந்து விடுவார் என்பதுதான் சாபம். பிரபுதேவாவிற்கு உயிர் கொடுத்த அஷ்வத் தான் அந்த மந்திரத்தையும் சொல்ல வேண்டும். திக்கிப் பேசும் அஷ்வத் அந்த மந்திரத்தை சொன்னாரா, பிரபுதேவா மீண்டும் பூத லோகம் சென்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாஸ்டர் அஷ்வத். விஜய் சேதுபதி நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் அவர் மகனாகவும், இன்னும் சில படங்களிலும் நடித்த சிறுவன். இந்தப் படத்தில் அவருடைய நடிப்புதான் படத்திற்குப் பலம். திக்கித் திக்கிப் பேசி அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார். மற்ற சிறுவர்களைப் போல தன்னால் இருக்க முடியவில்லையே என அவர் கலங்கும் போது நாமும் கலங்கிவிடுவோம்.

ஆக்ஷன், நடனம் என அசத்திய பிரபுதேவா ஒரு குழந்தைகள் படத்தில் பூதலோகத்தின் தலைவனாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ஆச்சரியம்தான். தலையை முழுவதுமாக மொட்டைய அடித்து உச்சந்தலையில் ஒரு நீளமான குடுமியுடன், வித்தியாசமான ஆடையுடன் குழந்தைகளைக் கவரும் விதத்தில் நடித்திருக்கிறார். வேறு எந்த ஒரு நடிகராவது இப்படி நடிக்க சம்மதிப்பார்களா என்பது சந்தேகம்தான். பிரபுதேவாவிற்கும், அஷ்வத்திற்கும் இடையில் நட்பு என்பதைக் கடந்து ஒரு அப்பா, மகன் பாசம் போல அமைந்து நெகிழ வைக்கிறது.

மீடியம் பட்ஜெட் படம், ஒரு சிறுவனுக்குத் தாய் என்றால் தமிழ் சினிமாவில் உள்ள இன்றைய முன்னணி நடிகைகள் யாரும் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களுக்காகவே இருப்பவர் ரம்யா நம்பீசன். வழக்கம் போல அவரும் இந்தப் படத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

படத்தில் வேறு எந்த கதாபாத்திரங்களுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது. பிரபுதேவா, அஷ்வத் இருவரைச் சுற்றியேதான் மொத்த படமும் அமைந்துள்ளது. பிக் பாஸ் சம்யுக்தா டீச்சராக நடித்திருக்கிறார்.

இமான் பின்னணி இசை பொருத்தமாக இருந்தாலும், பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி ஹிட்டாக்கி இருக்கலாம். யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு அவருடைய அனுபவத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் ஆகியவற்றை இன்னும் செலவு செய்து தரமாக அமைத்திருக்கலாம். ஒரு டிவி தொடருக்கு செலவு செய்வதைப் போலத்தான் செலவு செய்திருப்பார்கள் போலிருக்கிறது. இப்படி இன்னும் சில குறைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கான ஒரு படத்தைக் கொடுக்க முன் வந்த குழுவினரைப் பாராட்டலாம்.

Reference: Cinema Dinamalar