Mudhal Nee Mudivum Nee Movie Review in Tamil

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் முதல் நீ முடிவும் நீ படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Mudhal Nee Mudivum Nee Movie Review in Tamil

முதல் நீ முடிவும் நீ திரை விமர்சனம்

Producer – சூப்பர் டாக்கீஸ்
Director – தர்புகா சிவா
Music – தர்புகா சிவா
Artists – ஹரிஷ், கிஷன் தாஸ், மீதா ரகுநாத்
Release Date – 21 ஜனவரி 2022 (ஓடிடி)
Movie Time – 2 மணி நேரம் 28 நிமிடம்

பள்ளி வாழ்க்கை, காதல், பிரிவு, ரியூனியன் என விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ படம் மாதிரியான கதைதான். ஆனாலும், ஒரு சுவாரசியமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தர்புகா சிவா.

பள்ளி வாழ்க்கையைக் கடந்த ஒவ்வொருவருக்கும் அந்த நாள் ஞாபகங்கள் எப்போதும் மனதில் பசுமையாக இருக்கும். அதன் பின் கல்லூரி வாழ்க்கை, கல்யாண வாழ்க்கை என வந்தாலும் ஒரு நாளாவது அந்த பள்ளி வாழ்க்கையிலேயே இருந்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றும். அந்த அளவிற்கு நமது பள்ளி வாழ்க்கையில் எத்தனையோ மகிழ்ச்சி, சோகம் என பல மறக்க முடியாத சுவாரசிய சம்பவங்கள் நடந்திருக்கும். அவற்றை மீண்டும் நினைத்துப் பார்த்து வைக்கிறது இந்தப் படத்தின் முதல் பாதி.

சைனீஸ், வினோத் இருவரும் நெருங்கிய நண்பர்கள். வினோத்துக்கு உடன் படிக்கும் ரேகா மீது காதல். இருவரும் அடிக்க சந்தித்துப் பேசி தங்கள் காதலை வளர்த்துக் கொள்கிறார்கள். பள்ளியின் பேர்வெல் தினத்தன்று வேறு ஒரு பெண்ணுடன் வினோத் நெருக்கமாக இருந்ததாக நினைக்கும் ரேகா, வினோத்துடன் சண்டை போட்டு தன் காதலை முறித்துக் கொள்கிறார். காலங்கள் கடக்கிறது, வினோத் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருக்கிறார். மீண்டும் பள்ளி மாணவர்கள் சந்திக்கும் ரியூனியன் முதன் முதலாக நடக்கிறது. ரேகா தனது வருங்காலக் கணவருடன் விழாவிற்கு வருகிறார். பிரிந்த நண்பர்கள் தங்கள் பள்ளி வாழ்க்கையை நினைத்துப் பேசுகிறார்கள். ரேகாவைப் பார்த்ததும் வினோத்துக்குக் காதல் தவிப்பு ஏற்படுகிறது. ரேகாவும் பள்ளிக் கால காதலை நினைத்து தவிக்கிறார். அதன்பின் என்ன என்பதுதான் மீதிக் கதை.

பள்ளி மாணவர்களாக, மாணவிகளாக, ஆசிரியர்களாக நடித்திருக்கும் ஒவ்வொருவரும் அவ்வளவு யதார்த்தமாக நடித்துள்ளார்கள். அந்தப் பள்ளியின் ஒரு மூலையில் நின்று கொண்டு நாமே அதை நேரில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வைக் கொடுத்திருக்கிறார்கள்.

சைனீஸ் ஆக ஹரிஷ், படத்தில் நடித்தவர்களிலேயே அவ்வளவு குறும்புடன், யதார்த்ததுடன் நடித்தவர்களில் இவருக்குத்தான் முதலிடம். நமது பள்ளி நண்பர்கள் குழுவில் எப்படியும் இப்படி ஒரு நண்பர் இருப்பார். எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு குணம், என்ன வேண்டுமானாலும் செய்யும் இப்படி ஒரு நண்பன் கிடைத்தால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என எண்ண வைக்கிறார்.

வினோத் ஆக கிஷன் தாஸ். பள்ளி மாணவராக இருக்கும் போது காதல் நாயகனாக கலக்குகிறார். காதலைத் தவிர வேறு ஒன்று தெரியாது என்பது போல் காதலுக்காக உருகுகிறார். பின்னர் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் ஆனதும், அவரா இவர் என மெச்சூரிட்டி நடிப்பில் ஆச்சரியப்பட வைக்கிறார். விஜய் ஆண்டனியை அதிகம் பார்த்து ரசித்திருப்பார் போலிருக்கிறது. அவரைப் போலவே அப்படியே பவ்யமாகப் பேசி பரிதாபப்பட வைக்கிறார்.

படத்தின் நாயகி என்று ரேகாவாக நடித்திருக்கும் மீதா ரகுநாத்தை தான் சொல்ல வேண்டும். சினிமாத்தனம் இல்லாத இயல்பான ஒரு முகம். பள்ளி மாணவிகள் எப்படிப் பேசுவார்கள், பழகுவார்கள், நடந்து கொள்வார்கள் என பார்த்துப் பார்த்து நடித்திருக்கிறார். முத்தக் காட்சியில் கூட தைரியமாக நடித்திருக்கிறார். அப்பாவித்தனமான பெண்களிடம்தான் காதல் ஊற்றெடுக்கும் என்பதற்கு இவரது கதாபாத்திரம் ஒரு உதாரணம்.

ஆசிரியையாக நடித்திருக்கும் சிவசங்கரி, மற்ற மாணவர்களாக நடித்திருக்கும் சரண் குமார், ராகுல் கண்ணன், மஞ்சுநாத், வருண் ராஜன், சச்சின் நாச்சியப்பன், கௌதம் ராஜ், நரேன் ஆகியோரும் பள்ளி மாணவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். கேத்தரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூர்வா ரகுநாத், அனு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அம்ரிதா மான்டரின், விக்கி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிணி ரமேஷ் ஆகியோரும் குறிப்பிட வேண்டியவர்கள்.

தர்புகா சிவாவின் இசையில் ரியூனியன் போது இடம் பெறும் பாடல் உணர்வு பூர்வமாய் அமைந்துள்ளது. பள்ளிக் காட்சிகளில் சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு ஒரு பள்ளியை நம் கண்முன் நிறுத்துகிறது.

இடைவேளை வரை இடம் பெற்ற காட்சிகள், வசனங்கள், நடிப்பு என ஒவ்வொன்றிலும் இருக்கும் சுவாரசியம் இடைவேளைக்குப் பிறகு இல்லாமல் போய்விடுகிறது. ரியூனியன் பார்ட்டியிலேயே திரைக்கதை ஒரே இடத்தில் அப்படியே நின்று விடுகிறது. இடைவேளை வரை ஒரு படத்தை யதார்த்தமாய ரசித்தது, பின் ஒரு நாடகத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.

Reference: Cinema Dinamalar