மாறன்,Maaran

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் மாறன் படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Maaran Movie Review in Tamil

மாறன் திரை விமர்சனம்

Producer – சத்யஜோதி பிலிம்ஸ்
Director – கார்த்திக் நரேன்
Music – ஜிவி பிரகாஷ்குமார்
Artists – தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி
Release Date – 11 மார்ச் 2022
Movie Running Time – 2 மணி நேரம் 10 நிமிடம்

ஓடிடியில் வெளியாகும் சில படங்களைப் பார்க்கும் போது ஒன்றே ஒன்று எழுதத் தோன்றுகிறது. படத்தை எடுத்தவர்களே, இந்தப் படங்கள் எல்லாம் தியேட்டர்களில் வெளிவந்தால் யாரும் சீண்டக் கூட மாட்டார்கள் என, ஓடிடி பக்கம் வந்த விலைக்கு விற்று விடுகிறார்கள் போலிருக்கிறது.

புதிய படம் வருகிறது, அதுவும் முன்னணி நடிகர் நடித்த படம் வருகிறது என்று படம் பார்க்க ஆர்வத்துடன் உட்காரும் சராசரி ரசிகர்கள்தான் இம்மாதிரியான படங்களைப் பார்த்து ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். அப்படியான ஒரு படம்தான் இந்த ‘மாறன்’.

‘துருவங்கள் பதினாறு’ என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்த கார்த்திக் நரேன் தான் இந்தப் படத்தை இயக்கினாரா என்பது ஆச்சரியமாக உள்ளது. ‘அசுரன்’ போன்ற முன்னோடியான படங்களில் நடித்து தேசிய விருது வாங்கிய தனுஷ், இந்த மாதிரியான படங்களில் நடிக்க எப்படி நடிக்க சம்மதித்தார் என்பதும் அதிர்ச்சியாக உள்ளது.

‘இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட்’ ஆக இருப்பவர் தனுஷ். நடைபெற உள்ள இடைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சமுத்திரக்கனி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் செய்யத் திட்டமிடும் தில்லு முல்லுகளை அம்பலப்படுத்துகிறார். இந்நிலையில் தனுஷின் தங்கை ஸ்ம்ருதி வெங்கட்டை யாரோ கடத்தி கொலை செய்துவிடுகிறார்கள். சமுத்திரக்கனி தான் கடத்தி கொலை செய்திருப்பார் என சந்தேகப்படும் தனுஷ் அது பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். அவர் உண்மையைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் இது போன்ற பல கதைகளை இதற்கு முன் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப் படத்தைப் போல இப்படி ஒரு முதிர்ச்சியில்லாத ஒரு படத்தைப் பார்த்திருக்க மாட்டோம். “என்ன ஆச்சு கார்த்திக் நரேன் ?”.

இந்தப் படத்திற்கும், இந்தக் கதாபாத்திரத்திற்கும் இவ்வளவு நடிப்பு போதும் என தனுஷ், ஏதோ கடமைக்கு நடித்துக் கொடுத்து முடித்துவிட்டார். அவருக்கே இவ்வளவுதான் இன்ட்ரஸ்ட் என்னும் போது, நாம் இன்னும் என்ன சொல்வது ?.

‘மாஸ்டர்’ படத்திலேயே எதற்காக இவர் என கேட்க வைத்தவர் மாளவிகா மோகனன். இந்தப் படத்திலும் பெயருக்கு ஒரு கதாநாயகி என வந்து போகிறார். ஒரு காதல் காட்சி இல்லை, ஒரு டூயட் இல்லை. மாளவிகாவின் இன்ஸ்டாகிராம் போட்டோக்களுக்கு மட்டும் நாம் ரசிகர்களாக இருப்போம் என ரசிகர்கள் நினைக்கப் போகிறார்கள்.

தமிழ் சினிமாவில் ஒரு தங்கை கதாபாத்திரம் என்னவெல்லாம் செய்யுமோ அனைத்தையும் செய்கிறார் ஸ்ம்ருதி வெங்கட். தனுஷ் வீட்டின் முன் 20 வருடங்களுக்கும் மேலாக இஸ்திரி கடை வைத்திருப்பவராக மாமா ஆடுகளம் நரேன். கௌதம் மேனனை வெறுப்பேற்ற நினைத்து, அவர் நடிப்பதைப் போல, அவர் ஆங்கிலம் கலந்து பேசுவதைப் போல ஒரு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தை வைத்திருக்கிறார் கார்த்திக் நரேன்.

முன்னாள் அமைச்சராக வில்லன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி. இன்னும் எத்தனை படங்களில் இப்படி ஒரு கதாபாத்திரம் வரப் போகிறதோ, ஆளை விடுங்க சாமி என்றே சொல்ல வைக்கிறது. படத்தில் ஒரு டிவிஸ்ட் வேண்டுமே, அதற்காக இயக்குனர் அமீரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ்குமார் இசையில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தனுஷ் எழுதி பாட ஒரு பாடலை வைக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்கள்.

நேரம் போவதற்கு சினிமா பார்ப்போம் என்பார்கள், இந்தப் படத்தைப் பார்த்தால் நேரம் போகுமா என்பதும் சந்தேகம்தான்.

Reference: Cinema Dinamalar