Kadaisi Vivasayi Movie Review in Tamil

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் கடைசி விவசாயி படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Kadaisi Vivasayi Movie Review in Tamil

கடைசி விவசாயி திரை விமர்சனம்

Producer – டிரைபல் ஆர்ட்ஸ்
Director – மணிகண்டன்
Music – சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி
Artists – நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு
Release Date – 11 பிப்ரவரி 2022
Movie Time – 2 மணி நேரம் 25 நிமிடம்

விவசாயத்தை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் சில படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு சில படங்களே உண்மையான பிரச்சினைகளை சொன்ன படங்களாக இருந்தன. மற்ற சில படங்கள் விவசாயத்தை தங்களது கமர்ஷியல் வெற்றிக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர்.

இந்தப் படம் ஒரு ஆத்மார்த்தமான விவசாயியைப் பற்றிய படம். எத்தனை வயதானாலும் விவசாயம் செய்வதை விட்டுவிடக் கூடாது என நினைக்கும் இது போன்ற விவசாயிகள் இருப்பதால்தான் நமக்கெல்லாம் உண்ணும் உணவு எந்த ஒரு தடையும் இல்லாமல் கிடைக்கிறது.

இயக்குனர் மணிகண்டன் மீண்டும் ஒரு யதார்த்த வாழ்வியலை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு தவிர படத்தில் நடித்துள்ள மற்றவர்கள் இதற்கு முன்பு சினிமாவில் நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். அந்த அளவிற்கு அவரவர் கதாபாத்திரங்களாகவே திரையில் தெரிகிறார்கள். வசூலுக்காகவும், பிரபலம் ஆவதற்காகவும் என்னென்னவோ திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் இம்மாதிரியான படங்களை எடுப்பதற்கும் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் கலந்த பெருமை.

கிராமத்தில் பல வருட மரம் ஒன்றின் மீது இடி விழுந்து அழிந்து போகிறது. குல தெய்வத்திற்கு திருவிழா நடத்தாதே இதற்குக் காரணம் என ஊர் பஞ்சாயத்து கூடிப் பேசி திருவிழா நடத்த திட்டமிடுகிறார்கள். குல தெய்வப் படையலுக்காக ஊரின் வயதான விவசாயி நல்லாண்டியிடம் நெல்லைப் பயிரிட்டு தரச் சொல்கிறார்கள். அவரும் தனது நிலத்தில் பயிரிட ஆரம்பிக்கிறார். ஒரு நாள் நிலத்தின் அருகே மயில்கள் இறந்து கிடக்க அதை எடுத்து புதைக்கிறார். ஆனால், மயில்களைக் கொன்று புதைத்ததாக அவர் மீது பொய் வழக்கு தொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஊர் திருவிழாவிற்காகப் பயிரிடப்பட்ட நெல் வயலைப் பராமரிக்க சிக்கல் வருகிறது. சிறையிலிருந்து விடுதலையாகி நல்லாண்டி வெளியில் வந்தாரா, எந்த பாதிப்பும் இல்லாமல் நெல் அறுவடையாகி வந்ததா, ஊர் திருவிழா நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கிராமம், அங்குள்ள இயல்பான மனிதர்கள், ஊர்த் திருவிழா, எழுந்து அடங்கும் சாதிப் பிரச்சினை, போலீசாரின் பொய் வழக்கு, நேர்மையாக விசாரிக்கும் நீதிபதி என ஒரு விவசாய கதைக்குள் திரைக்கதையிலிருந்து விலகாமல் என்னென்ன பிரச்சினைகளைப் பேச முடியுமோ அவற்றை உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறார் இயக்குன மணிகண்டன்.

மாயாண்டி என்ற வயதான விவசாயி ஆக நல்லாண்டி. படம் வெளியாகும் போது அவர் இந்த உலகத்திலேயே இல்லை என்பது வருத்தமான விஷயம். எந்த ஒரு காட்சியிலும் அவர் நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. நிலம், நெல், விவசாயம், ஊர் திருவிழா, மாடு, கோழி என அனைத்தின் மீதும் பாசமான ஒரு மனிதரை இந்தக் காலத்தில் இந்தத் தலைமுறை பார்த்திருக்குமா என்பது சந்தேகம்தான். எப்போதுமே ஒரு தீர்க்கமான பார்வை, அத்தனை வயதிலும் தள்ளாத நடை, தளர்வில்லாத உழைப்பு, சிறைக்குச் சென்றாலும் நெல்லுக்கு என்ன ஆச்சோ என்ற பதைப்பு என மாயாண்டி கதாபாத்திரத்தில் நல்லாண்டி அவராகவே வாழ்ந்திருக்கிறார்.

தனது முறைப் பெண் அகால மரணமடைந்த காரணத்தால் கொஞ்சம் மனநிலை தடுமாறி ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருப்பவராக விஜய் சேதுபதி. முருகன் மீது அளவு கடந்த பக்தி கொண்ட பக்தர். படத்தில் இந்தக் கதாபாத்திரம் இருந்தாலும் இல்லையென்றாலும் படத்திற்கு பாதகமும் இல்லை, சாதகமும் இல்லை. ஒரு நல்ல படத்தில் நாமும் இருக்க வேண்டும் என விஜய் சேதுபதி நினைத்து நடித்திருக்கலாம். அதே எண்ணத்தில் யோகி பாபுவும் கூட நடித்திருக்கலாம். ஊரில் இருக்கும் நிலங்களை விற்று யானை வாங்கி அதை வைத்து பிழைப்பு நடத்தும் கதாபாத்திரம் யோகி பாபுவுக்கு. இரண்டு, மூன்று காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்.

படத்தில் இருக்கும் முக்கியமான ஒரே பெண் கதாபாத்திரம் நீதிபதி. பெண் நீதிபதியாக ரெய்ச்சல் ரெபேகா. இப்படி ஒரு எளிமையான நீதிபதியை சினிமாவில் பார்ப்பதும் ஆச்சரியம்தான். மண் மீதும், மனிதர்கள் மீதும் பாசமான ஒரு நீதிபதியாக ரெய்ச்சல் இயல்பாக நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதுமுகங்கள் கூட அவரவர் கதாபாத்திரங்களில் ரசிக்க வைக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி இருவரது இசையும் தேவையான இடங்களில் மட்டும் ஒலிக்கிறது. சில இடங்களில் இசை இல்லாத நிசப்தமே இருக்கிறது. உணர்வுகளை இசை வழியே கடத்தும் இசை இன்னும் இருந்திருக்கலாமோ என்ற ஏக்கமும் வருகிறது. இயக்குனர் மணிகண்டனே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். சினிமாத்தனமில்லாத ஒளிப்பதிவு.

ஒரு சில இடங்களில் ஒரு டாகுமென்டரி படத்தைப் பார்க்கிறோமோ என்ற எண்ணம் வருகிறது. சில காட்சிகளில் சிலர் பேசும் வசனம் புரியாமல் போகிறது. இப்படியான சிற்சில குறைகளைத் தவிர்த்திருக்கலாம். ஆனாலும், தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான பதிவு இந்த ‘கடைசி விவசாயி‘.

Reference: Cinema Dinamalar