கார்கி,Gargi

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் கார்கி படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Gargi Movie Review in Tamil

கார்கி திரை விமர்சனம்

Gargi Movie Production – பிளாக்கி, ஜெனி, மை லெப்ட் பூட் புரொடக்ஷன்
Gargi Movie Director – கௌதம் ராமச்சந்திரன்
Gargi Movie Music Director – கோவிந்த் வசந்தா
Gargi Movie Artists – சாய் பல்லவி, காளி வெங்கட்
Gargi Movie Release Date – 15 ஜுலை 2022
Gargi Movie Running Time – 2 மணி நேரம் 10 நிமிடம்

சினிமா என்பது வெற்றி பெற்றவர்களுக்கான ஊடகம் மட்டுமல்ல, வித்தியாசமாக யோசிப்பவர்களுக்கும், வளருபவர்களுக்குமானது என்பதை சில படங்கள்தான் நிரூபிக்கின்றன. அப்படி ஒரு படம் தான் இந்த ‘கார்கி‘.

முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சில படங்களை இயக்குவார்கள். முதல் படத்தில் வெற்றி பெறத் தவறியவர்களுக்கு இந்த கனவுலகம் அவ்வளவு சீக்கிரத்தில் கதவுகளைத் திறக்காது.

ஆனால், வித்தியாசமான கனவு கொண்டிருந்த தங்களது நண்பனுக்காக நண்பர்கள் சேர்ந்து கை தூக்கிவிட்டு இந்த ‘கார்கி’ படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழில் ‘ஆக்ஷன், ஜகமே தந்திரம்’ படங்களில் நடித்த, தற்போது ‘பொன்னியின் செல்வன், கேப்டன்’ படங்களில் நடித்து முடித்த நடிகை ஐஸ்வர்ய லட்சுமி இணைந்து தயாரித்துள்ள படம். ஒரு நடிகை தயாரிக்கும் படத்தில் வேறொரு நடிகையை நடிக்க வைப்பதற்கு பெரிய மனது வேண்டும். இந்தப் படத்திற்கு சாய் பல்லவி தான் பொருத்தமாக இருப்பார் என்ற இயக்குனரின் கனவுக்கு கடிவாளம் போடாமல் இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்.

100 ஆண்டு கால தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கிளைமாக்ஸ் இதுவரை வந்ததில்லை என இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் அமைந்திருக்கிறது. படம் பார்க்கும் போது கிளைமாக்ஸ் இப்படித்தான் போகும் என யாராலும் நிச்சயம் யூகிக்க முடியாத ஒரு கிளைமாக்ஸ்.

சாய் பல்லவி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை. பத்து வயதில் ஒரு தங்கை. அப்பா ஆர்.எஸ். சிவாஜி ஒரு அபார்ட்மென்ட்டின் செக்யூரிட்டி. அம்மா வீட்டில் மாவு அரைத்து விற்கும் ஒரு குடும்பத் தலைவி. ஒரு நாள் அப்பா சிவாஜி வேலை பார்க்கும் அபார்ட்மென்ட்டில் ஒரு சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக நான்கு வட இந்தியர்கள் கைதாகிறார்கள். அவர்களுடன் சேர்த்து சாய் பல்லவியின் அப்பா சிவாஜியும் ஐந்தாவது குற்றவாளி என கைது செய்கிறது காவல் துறை. தன் அப்பா நிரபராதி என நிரூபிக்க சட்டப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார் சாய் பல்லவி. அவருக்குத் துணையாக வக்கீல் காளி வெங்கட் கை கொடுக்கிறார். இருவரும் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்ட சிவாஜியை விடுவித்தார்களா, அதற்கு அவர்களுக்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கார்கி என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி. நம் வீட்டில் ஒரு பெண் எப்படி இருப்பாரோ அப்படியான ஒரு கதாபாத்திரம். இந்தக் காலத்தில் எதையும் எதிர்த்து நிற்கும், போராடும் குணம் ஒரு பெண்ணுக்குத் தேவை என்பதை இவரது கதாபாத்திரம் எடுத்துக் காட்டுகிறது. சாய் பல்லவிக்கு தமிழ் சினிமா இன்னும் சரியான கதாபாத்திரங்களை, படங்களைக் கொடுக்கவில்லை என அவர் நடித்த சில தெலுங்குப் படங்களைப் பார்க்கும் போது தோன்றும். அந்தக் குறையை இந்த ‘கார்கி’ படமும், கதாபாத்திரமும் போக்கியிருக்கிறது. படம் முழுவதையும் ஒற்றை ஆளாகத் தாங்கி நிற்கிறார். சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களைக் கூட இவ்வளவு நுணுக்கமாகச் செய்ய முடியுமா என வியக்க வைக்கிறார். இன்றுள்ள சில முன்னணி நடிகைகள் கூட சாய் பல்லவியின் நடிப்பைப் பார்த்து கொஞ்சம் பயிற்சி மேற்கொண்டால் தவறில்லை என்று சொல்ல வைக்கும் ஒரு நடிப்பு. இந்த ஆண்டின் சிறந்த நடிகைகக்கான பல விருதுகள் சாய் பல்லவிக்குக் காத்திருக்கிறது.

காளி வெங்கட், தமிழ் சினிமா இன்னும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாத ஒரு நடிகர். அவரது பேச்சும், நடிப்பும் எந்தக் கதாபாத்திரத்திலும் அவ்வளவு யதார்த்தமாக இருக்கும். அதை உன்னிப்பாகக் கவனித்து இந்தப் படத்தில் வக்கீல் கதாபாத்திரம் கொடுத்து அவருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குனர். அந்த நம்பிக்கையைத் துளி கூட பொய்யாக்காமல் ‘இந்திரன்ஸ் கலியபெருமாள்’ என்ற வக்கீல் கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

சாய் பல்லவியின் அப்பாவாக ஆர்எஸ் சிவாஜி, பாதிக்கப்பட்ட சிறுமியின் அப்பாவாக சரவணன், நீதிபதியாக திருநங்கை சுதா, வக்கீலாக ஜெயப்பிரகாஷ் என ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் அவ்வளவு நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

கோவிந்த் வசந்தா பின்னணி இசை ஒவ்வொரு காட்சியிலுமே உயிர்ப்புடன் இருக்கிறது. இம்மாதிரியான படங்களுக்கு பின்னணி இசை மிக முக்கியம். ’96’ படத்திற்குப் பிறகு கோவிந்த் வசந்தாவிற்குப் பேர் சொல்லும் ஒரு படம். ஸ்ரையந்தி, பிரேம்கிருஷ்ணா அக்காடு இருவரின் ஒளிப்பதிவும் நம்மையும் படத்திற்குள் கூடவே பயணிக்க வைக்கும் ஒரு உணர்வைத் தருகிறது.

இடைவேளைக்குப் பின் திரைக்கதை கொஞ்சம் தடுமாறுகிறது. சாய் பல்லவிக்கும் சிறுமியாக இருந்த போது பாலியல் சீண்டல் இருந்தது என்பதை அடிக்கடி காட்டுகிறார்கள். அது படத்திற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அந்த பிளாஷ்பேக்கில் ஒரு குறிப்பிட்ட காட்சியை நீக்கியிருந்தால் உதவியாக இருந்திருக்கும்.

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என கவிமணி சொன்னார். ஆனால், இங்கு மங்கையரை சிறுமிகளாக இருந்தாலும் விட்டு வைக்காமல் அவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. பெண்கள், புதுமைப் பெண்களாய் மாற வேண்டும் என்று கடந்த பல வருடங்களாகவே சொல்லி வருகிறார்கள். ஒரு சிலர் அப்படி மாறினாலும் இந்த ஆணாதிக்கம் நிறைந்த ஊரும், உலகமும் அவர்களை அடக்கி விடுகிறது.

ஒரு சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக, இந்த ஊர், மீடியா, அதிகாரிகள் என யார் எதிர்த்து நின்றாலும் நியாயத்திற்காக, ஒரு புதுமைப் பெண் எப்படிப் போராடுவாள் என்பதுதான் இந்த ‘கார்கி’. ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.

Reference: Cinema Dinamalar