கோப்ரா,Cobra

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் கோப்ரா படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Cobra Movie Review in Tamil

கோப்ரா திரை விமர்சனம்

Cobra Movie Production – செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ
Cobra Movie Director – அஜய் ஞானமுத்து
Cobra Movie Music Director – ஏஆர் ரகுமான்
Cobra Movie Artists – விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான்
Cobra Movie Release Date – 31 ஆகஸ்ட் 2022
Cobra Movie Running Time – 3 மணி நேரம் 3 நிமிடம்

‘டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள்’ என அடுத்தடுத்து இரண்டு வித்தியாசமான படங்களைக் கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் அடுத்த படம், ஏஆர் ரகுமான் இசை, விக்ரம் ஆகியோரது பங்களிப்பால் இந்தப் படம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

டீசர், டிரைலர் இரண்டையும் பார்த்த பிறகு ஏதோ புதிதாக சொல்லப் போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள். அந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் இயக்குனர் அஜய் ஞானமுத்து முழுமையாக பூர்த்தி செய்திருக்கிறாரா என்பதுதான் படத்தைப் பார்த்த பிறகு நமக்குள் எழுந்த கேள்வி.

படத்தின் ஆரம்பத்தில் சில பல வெளிநாடுகளைக் காட்டி, ஸ்காட்லாந்து நாட்டு இளவரசரைக் கொல்ல ஆப்பிரிக்க பாதிரியார் தோற்றத்தில் அறிமுகமாகிறார் படத்தின் கதாநாயகன் விக்ரம். அந்தக் கொலை எப்படி நடந்தது என்பதை இன்டர்போல் போலீஸ் அதிகாரியான இர்பான் பதான் விசாரிக்க ஆரம்பிக்கிறார். கணித முறைப்படி நடத்தப்பட்ட அந்த இளவரசர் கொலையும், அதே முறையில் இந்தியாவில் ஒரிசா முதல்வர் ஒருவர் கொல்லப்பட்டதிலும் ஒற்றுமை இருக்கிறது என கல்லூரி மாணவி மீனாட்சி கோவிந்தராஜன் ஒரு ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை எழுதுகிறார். அது பற்றிய தகவல் கிடைத்து இந்தியா வருகிறார் இர்பான் பதான். அதற்கடுத்து நடக்கும் சில கொலை சம்பவங்களை விக்ரம் செய்கிறார். விக்ரம் செய்யும் கொலைகளுக்குப் பின்னணியில் சர்வதேச அளவில் பரவியுள்ள கார்ப்பரேட் கம்பெனி முதலாளியான ரோஷன் மாத்யூ இருக்கிறார். இந்த சர்வதேச கொலையாளிகளை இர்பான் கண்டுபிடிக்கிறாரா, விக்ரம் அவரிடமிருந்து தப்பிக்கிறாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

விக்ரமின் நடிப்புத் திறமையை நம்பி முழுமையாக களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இயக்குனரின் நம்பிக்கையை விக்ரம் வீணாக்கவில்லை. விதவிதமான தோற்றங்களில் முழு படத்திலும் தனது நடிப்பால் பல காட்சிகளில் கைதட்டல் வாங்க வைக்கிறார். அதே சமயம் தன்னை நம்பி இந்தப் படத்தில் நடிக்க வந்த விக்ரமின் நம்பிக்கையை அஜய் ஞானமுத்து இன்னும் அதிகமாகக் காப்பாற்றி இருக்கலாம். மூன்று மணி நேரம் ஓடும் படத்தை இரண்டரை மணி நேரமாகச் சுருக்கி, சில காட்சிகளின் நீளத்தையும் குறைத்திருந்தால் பரபரப்பான ஒரு ஹாலிவுட் த்ரில்லர் படத்தைப் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்.

ஆரம்பக் காட்சியிலேயே அடையாளம் தெரியாத அளவிற்கு அசத்தலாய் அறிமுகமாகிறார் விக்ரம். அந்த அசத்தல் ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சரியத்துடன் நகர்கிறது. குறிப்பாக இடைவேளைக்குப் பின்னர் போலீஸ் விசாரிக்கும் காட்சியில் விக்ரம், ஆனந்தராஜ் கூட்டணியின் நடிப்பு தியேட்டர் முழுவதையும் கரவொலி எழுப்ப வைக்கிறது. ‘அந்நியன்’ படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ் ஏட்டிக்குப் போட்டியாக நடித்த அந்தக் காட்சி போல இந்தக் காட்சியில் விக்ரம், ஆனந்தராஜ் ரசிக்க வைத்துள்ளார்கள். படத்தின் முக்கியமான சஸ்பென்ஸ் இரண்டு வேடங்களில் விக்ரம் நடித்திருப்பது. இரண்டு விக்ரம் வந்த பிறகு காட்சிகளில் தெளிவில்லாத ஒரு குழப்பம் இருக்கிறது. அது கிளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. சாமானிய ரசிகர்களுக்கும் படத்தைப் புரியும் விதத்தில் கொடுக்க இயக்குனர் முயற்சித்திருக்க வேண்டும்.

விக்ரமை ஒருதலையாகக் காதலிப்பவராக ஸ்ரீநிதி ஷெட்டி. வழக்கமான மசாலாப் பட கதாநாயகிக்குரிய வேடம்தான். ஆராய்ச்சி மாணவியாக மீனாட்சி கோவிந்தராஜன் ஸ்ரீநிதியை விட அதிகக் காட்சிகளில் வருகிறார். இள வயது விக்ரம் காதலியாக சில காட்சிகளில் வந்து போகிறார் மிருணாளினி ரவி. இன்டர்போல் அதிகாரியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், சிறப்பான அறிமுகம். அவருக்கு இது முதல் படம் என்று சொன்னால் ஆச்சரியம்தான். ஹிந்திப் படங்களிலும் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வரலாம். கார்ப்பரேட் அதிபர்களை வில்லனாக இன்னும் எத்தனை படங்களில் காட்டுவார்களோ? மலையாள நடிகர் ரோஷன் மாத்யூ அந்த அதிபர் கதாபாத்திரத்தில் பெரிதாக ஜொலிக்கவில்லை.

படத்தின் மேக்கிங் சிறப்பாக உள்ளது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கிருஷ்ணன், சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் ஹாலிவுட் படங்களை கண்முன் கொண்டு வந்து காட்டியிருக்கிறார்கள். ஏஆர் ரகுமான் இசை ஏமாற்றம். பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம்தான். பின்னணி இசையை அவர்தான் அமைத்தாரா என்பது சந்தேகமாக உள்ளது.

கணிதம், அறிவியல், பலவித தோற்றங்கள், ஆள் மாறாட்டம், கார்ப்பரேட் அரசியல் என பல விஷயங்களை ஒரே படத்தில் சொல்லி ஓவர் டோஸாகக் கொடுத்ததுதான் குழப்பத்திற்குக் காரணம். அருண் விஜய் நடித்து வெளிவந்த ‘தடம்’ படத்தின் கதையையும் கொஞ்சம் ஞாபகப்படுத்திச் செல்கிறது. மேலே சொன்ன குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒரு கமர்ஷியல் படமாக ரசிக்கலாம்.

Reference: Cinema Dinamalar