Bro Daddy Movie Review in Tamil

தமிழ் பாடல் வரிகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது. இந்த திரை விமர்சனம் பகுதியில் நீங்கள் ப்ரோ டாடி (மலையாளம்) படத்தைப் பற்றி முழு விமர்சனம் கீழே காணலாம்.

Bro Daddy Movie Review in Tamil

ப்ரோ டாடி திரை விமர்சனம்

Producer : ஆசிர்வாத் சினிமாஸ்
Director : பிரித்விராஜ்
Music : தீபக் தேவ்
Artists : மோகன்லால், பிரித்விராஜ், மீனா, கல்யாணி பிரியதர்ஷன், கனிகா, லாலு அலெக்ஸ், உன்னி முகுந்தன், சௌபின் சாஹிர், மல்லிகா சுகுமாரன் மற்றும் பலர்
Release Date : 26.01.22
Movie Time : 2 மணி 38 நிமிடங்கள்

இன்னும் கல்யாணம் ஆகாத ஒரு இளைஞன் ஒரே சமயத்தில் அண்ணனாகவும், அப்பாவாகவும் புரமோஷன் பெற்றால் அவன்தான் ப்ரோ டாடி!

மோகன்லால், மனைவி மீனா, மகன் பிரித்விராஜ் ஒரு குடும்பம்.. லாலு அலெக்ஸ், மனைவி கனிகா, மகள் கல்யாணி இன்னொரு குடும்பம். மோகன்லாலும் லாலு அலெக்ஸும் திக் பிரண்ட்ஸ்.. பிரித்விராஜ் விளம்பர துறையிலும் கல்யாணி ஐடி நிறுவனத்திலும் பெங்களூரில் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரண்டு வீட்டிலும் விரும்புகிறார்கள். ஆனால் பெற்றோர்களிடம் இவர்கள் இருவரும் திருமண விஷயத்தில் பெரிதாக ஆர்வம் காட்டிக்கொள்ளவில்லை.

அதேசமயம் இவர்கள் இருவரும் மூன்று வருடங்களுக்கும் மேலாக பெங்களூரில் லிவிங் டுகெதர் முறையில் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள்.. .இதில் கல்யாணி தற்போது இரண்டு மாத கர்ப்பம் வேறு. இந்த விஷயத்தை எப்படி தங்கள் பெற்றோரிடம் சொல்வது என தவிக்கும் நேரத்தில், உடனே ஊருக்கு கிளம்பி வா என மகனை அழைக்கிறார் மோகன்லால். வந்த இடத்தில் தான், தனது அம்மாவும் இரண்டு மாத கர்ப்பம் என்கிற விஷயம் தெரியவர, தலைசுற்றாத குறை பிரித்விராஜுக்கு.

அதன்பின் தனது விஷயத்தையும் உடனடியாக அப்பாவிடம் பிரித்விராஜ் வெளிப்படுத்த, அடுத்த கட்டமாக கல்யாணியையும் ஊருக்கு வரவழைக்கிறார்கள். கர்ப்ப விஷயம் கல்யாணியின் தந்தைக்கு தெரிவதற்குள் இரண்டு பேருக்கும் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்கிறார் மோகன்லால். நண்பனிடம் பேசி இருவருக்கும் நிச்சயம் செய்து திருமணத்திற்கும் தேதி குறிக்கின்றனர்.

இந்த நிலையில், பிரித்விரஜுடன் பெங்களூரில் ஒரு பெண் தங்கி இருந்தார் என்றும் அவள் இப்போது இரண்டு மாத கர்ப்பம் என்றும் உறவினர் ஒருவர் மூலமாக தகவல் வர, அது தனது மகள் தான் என தெரியாமல் கோபமாகும் கல்யாணியின் தந்தை, திருமணத்தையே நிறுத்துகிறார். ஆனால் அந்தப்பெண் தனது மகள் தான் என தெரியவரும்போது அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்.

தந்தை மகனாக மோகன்லால்-பிரித்விராஜ்.. இருவருமே தந்தை மகன் போல இல்லாமல் அண்ணன் தம்பியாகவே காட்சியளிக்கிறார்கள். அதை ஒரு காட்சியில் சார்லியே பிரித்விராஜிடம் கேட்பதுபோலவும் வைத்திருககிறார்கள். அதிலும் பிரித்விராஜ் ரொம்பவே யூத்தாக ஸ்டைலிஷாக மாறி இருக்கிறார். தனக்கு மீண்டும் குழந்தை பிறக்க போவதை நினைத்து மோகன்லால் வெட்கப்படுவதும், அதுகுறித்து தனது தாய் விசாரிக்கும்போது அப்போது தான் கல்யாணம் ஆனவர் போல வெட்கப்படுவதும் செம க்யூட். அதேபோல திருமணம் செய்யாமலேயே தான் அப்பாவாக ஆகப்போவதையும் பல வருடங்களுக்கு பிறகு தான் மீண்டும் அண்ணனாக ஆகப்போவதையும் அறிந்தபின் அதை பிரித்விராஜ் வெளிப்படுத்தும் விதம் நகைச்சுவையின் உச்சம்.

ஜாடிக்கேத்த மூடியாக மோகன்லாலுக்கு மனைவியாக மீனா. த்ரிஷ்யம் படத்தில் எந்நேரமும் பயத்துடனும் இறுக்கமான முகத்துடனும் காட்சியளித்த மீனா இதில் அப்படியே நேர்மாறாக மகிழ்சியும் வெட்கமும் கலந்த பெண்ணாக வளைய வருகிறார். குறிப்பாக இந்த வயதில் தான் கர்ப்பமானாலும் அதை மகனிடமும் மாமியாரிடமும் அவர் ஹேண்டில் பண்ணும் விதம் தனி அழகு.

பிரித்விராஜக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன். இவர்களது டாம் அன்ட் ஜெர்ரி சண்டை ரசிக்கும்படி இருக்கின்றன. கர்ப்பத்தை பெற்றோரிடம் மறைத்து மோகன்லால் குடும்பத்துடன் சேர்ந்து கல்யாணி நடத்தும் ட்ராமா, அவருக்கு காமெடியும் சரளமாக வரும் என்பதை நிரூபிக்கிறது.

இவர்களுக்கு சமமான முக்கிய வேடத்தில் லாலு அலெக்ஸ்.. தனது நண்பனின் மனைவின் தான் மீனா என்றாலும், ஒருகாலத்தில் மீனாவை ஒருதலையாக காதலித்து, மீனாவின் சம்மதம் கிடைக்காமல் அவர் வீட்டுக்கே பெண் கேட்டு போய் பல்பு வாங்கிய முன் அனுபவம் லாலு அலெக்சுக்கு உண்டு. இருவரும் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் 96 பட பின்னணி இசையில் இருவரும் வெட்கப்பட்டு கொள்ளும் காட்சி அழகியல் கலந்த நகைச்சுவை. தன்னை எல்லோரும் ஏமாற்றி விட்டார்களே என்கிற மனக்குமுறலை க்ளைமாக்ஸில் வெளிப்படுத்தும்போது நெகிழ வைக்கிறார் லாலு அலெக்ஸ். அவரது மனைவியாக கனிகா.. மீனாவுக்கு இணையாக இவருக்கும் நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிரித்விராஜின் நிஜ அம்மா மல்லிகா சுகுமாரன், இதில் அவருக்கு பாட்டியாக நடித்துள்ளார். மருமகள் மீனா கர்ப்பமானதை அறிந்துகொண்டு இஞ்சி புளிச்சாறு கொடுத்து விடுவது டச்சிங் சீன்.. கொஞ்ச நேரமே வந்து போகும் அதேசமயம் கதைக்கு திருப்புமுனையான கதாபாத்திரத்தில் நடிகர் சார்லி. மோகன்லாலிடம் அவர் உரையாடும் காட்சிகள் கலகல.. கெஸ்ட் ரோலில் உன்னிமுகுந்தன்.. நட்புக்காக செய்திருக்கிறார். படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். குறிப்பாக திருமண ஏற்பாட்டாளராக சௌபின் சாஹிர் வரும் காட்சிகளை வெட்டி எடுத்திருந்தாலும் கூட, கதையில் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது

பிரித்விராஜின் டைரக்சனில் இரண்டாவது படம் இது. முதல் படத்தை கமர்ஷியல் ஆக்சன் பிளேவரில் கொடுத்தவர் இதில் முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே கையில் எடுத்துள்ளார். அதிலும் ஒரே நேரத்தில் அப்பாவும் மகனும் தந்தை ஆகப்போகிறார்கள் என்கிற கான்செப்ட்டே சற்று புதிதாக இருக்கிறது. ஆக்சன் படமோ, காமெடி படமோ அதை ரசிகர்கள் ரசிக்கும் விதமாக, போரடிக்காத வகையில் எப்படி தரவேண்டும் என்கிற வித்தை இயக்குனர் பிரித்விராஜுக்கு அழகாக கைவந்துள்ளது.

Reference: Cinema Dinamalar