9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் விஜய் - அஜித் படங்கள்..!  வெற்றி யாருக்கு ?

இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை:

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது வாரிசு திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மறுபுறம் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தணிக்கைக் குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ இரண்டு படங்களுமே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி ஒரே நாளில் ரிலீசாவது உறுதியாகியுள்ளதுகடந்த 2014-ம் ஆண்டு அஜித்தின் ‘வீரம்’, விஜய்யின் ‘ஜில்லா’ ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 10-ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. அதில் வீரம் ,ஜில்லா இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது 9 ஆண்டுகள் கழித்து இருவரின் படங்களான ‘துணிவு’, ‘வாரிசு’ இரண்டும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குடும்பம், தாய்ப் பாசம் என்ற கதைக்கருவை அடிப்படையாகக் கொண்டு ஆக்ஷனுடன் வாரிசு படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து ‘துணிவு’ திரைப்படம் உருவாகியுள்ளது.