ராஜா மகள்: சினிமா விமர்சனம்
நடிகர்: ஆடுகளம் முருகதாஸ் நடிகை: வெலீனா, பிரதிக் ஷா  டைரக்ஷன்: ஹென்றி இசை: சங்கர் ரங்கராஜன் ஒளிப்பதிவு : நிக்கி கண்ணன்

செல்போன் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ள ஆடுகளம் முருகதாஸ் மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மகளுடன் வாடகை வீட்டில் வசித்து சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நகர்த்துகிறார். மகள் மீது அவருக்கு அளவு கடந்த பாசம். மகள் கேட்டதையெல்லாம் மறுப்பு சொல்லாமல் வாங்கி கொடுக்கிறார்.

ஒரு கட்டத்தில் அதுவே அவருக்கு வினையாக மாறுகிறது. சக பள்ளி தோழனின் பெரிய வீட்டை பார்த்து பிரமிப்பாகும் மகள் அதுபோன்று ஒரு வீடு வாங்கி தருமாறு ஆடுகளம் முருகதாசிடம் நிர்ப்பந்திக்கிறார். மகளின் ஆசையை நிராசையாக்க மனமில்லாத ஆடுகளம் முருகதாஸ் வீடு வாங்கி தருகிறேன் என்று உறுதி அளித்து விடுகிறார்.

சொந்த வீடு கனவு சிறுமியின் மனதில் ஆழமாக வேரூன்றுகிறது. எப்போதும் அது நினைவாகவே இருக்கிறாள். மகளின் ஆசையை ஆடுகளம் முருகதாஸ் நிறைவேற்றினாரா? இல்லையா? என்பது கிளைமாக்ஸ்.

கதையின் நாயகனாக வரும் ஆடுகளம் முருகதாஸ் நடுத்தர வர்க்க தந்தையின் யதார்த்தமான உணர்வுகளையும் வலிகளையும் அபாரமாக வெளிப்படுத்தி இருக்கிறார். மகளின் விருப்பங்களை நிறைவேற்றும் பாசமான தந்தையாகவும் வீடு கேட்ட மகளுக்காக பணம் இல்லாமலேயே புதுவீடு வாங்கும் எண்ணத்தில் கடனுக்காக அலைபவராகவும் கடன் கிடைக்காமல் கையலாகாத நிலையில் கதறுகிறவராகவும் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார். முருகதாஸ் மனைவியாக வரும் வெலீனா கதாபாத்திரத்துக்கு தேவையான அளவு நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். மகளாக வரும் சிறுமி பிரதிக் ஷா கோபம், வருத்தம், மகிழ்ச்சி உணர்வுகளை முகபாவங்களில் சிறப்பாக வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறார்.

கதையோட்டத்தில் சில இடங்களில் நாடகத்தனம் தெரிகிறது. சங்கர் ரங்கராஜன் இசை மென்மையான கதைக்கு வலுசேர்த்துள்ளது. நிக்கி கண்ணனின் ஒளிப்பதிவும் சிறப்பு. நடுத்தர வர்க்கத்து தந்தைக்கும் மகளுக்குமான பாசபோராட்ட நிகழ்வுகளை அழுத்தமான திரைக்கதையில் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தி மனதில் பதிய வைத்து இருக்கிறார் இயக்குனர் ஹென்றி.