பாசக்கார பய : சினிமா விமர்சனம்
நடிகர்: விக்னேஷ், பிரதீப் நடிகை: காயத்ரி ரெமோ  டைரக்ஷன்: விவேக பாரதி இசை: சௌந்தர்யன் ஒளிப்பதிவு : கே.வி. மணி

நாயகன் விக்னேஷ் உறவுகளை நேசிக்கிறார். குடும்பத்துக்காக சிறைக்கும் செல்கிறார். தாய் மாமனின் தியாகத்தை பார்த்து உருகிப் போகிறார் நாயகி காயத்ரி ரெமோ. தன்னைவிட அதிக வயது மூத்தவராக இருந்தாலும் மணந்தால் தாய்மாமன் விக்னேஷை மட்டுமே மணப்பேன் என்ற உறுதியோடு இருக்கிறார். இந்த நிலையில் நாயகி காயத்ரியை ஒருதலையாக காதலிக்கிறார் படத்தின் இன்னொரு நாயகனான பிரதீப்.

ஒரு கட்டத்தில் விக்னேஷ் சிறையில் இருந்து விடுதலையாகி வருகிறார். அவருக்கு காயத்ரி ரெமோவை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. ஆனால் மாமனை மணப்பதில் காயத்ரி ரெமோ பிடிவாதமாக இருக்கிறார்.

விக்னேஷ் ஏன் சிறைக்கு போனார்? காயத்ரியின் காதல் கனவு கைகூடியதா? பிரதாப்பின் காதல் என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது மீதி கதை.

90-களின் ஹீரோவான விக்னேஷ் அதே பொலிவுடன் இருக்கிறார். சீனியர் நடிகரான அவருடைய அனுபவ நடிப்பு படத்துக்கு பலம் சேர்க்கிறது.

யார் இந்த தேவதை என்று கேட்க வைக்கிறது நாயகி காயத்ரியின் அழகு. நடிப்பிலும் குறை ஒன்றும் இல்லை.

இன்னொரு நாயகனாக வரும் பிரதாப் ஒருதலைக் காதலில் கரைபவராக கேரக்டருக்கு உயிர் சேர்த்து இருக்கிறார்.

நாயகி அப்பாவாக வரும் விவேக பாரதி, மந்திரவாதி தேனி முருகன் என குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் தங்கள் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று யூகிக்க முடிவது பலவீனம். ஆனாலும் அதையும் மீறி கிராமத்து குடும்ப கதையை இயக்குனர் விவேக பாரதி சுவாரஸ்யம் குறையாமல் உணர்வுப்பூர்வமாக சொல்லி இருப்பது படத்துக்கு பலம்.

சௌந்தர்யனின் இசையில் பாடல்கள் தேனிசையாக இனிக்கிறது.

கே.வி. மணியின் கேமரா காட்சிகளை மிக அழகாக படம் பிடித்திருக்கிறது.