தி கிரேட் இந்தியன் கிச்சன் : சினிமா விமர்சனம்
நடிகர்: ராகுல் ரவீந்தர் நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ்  டைரக்ஷன்: ஆர். கண்ணன் இசை: ஜெரி சில்வஸ்டர் வின்சென்ட் ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம்

நடனத்தில் ஆர்வம் உள்ள ஐஸ்வர்யா ராஜேசுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கின்றனர். புகுந்த வீட்டில் கணவன், மாமனார் மாமியார், உறவினர்கள் என அனைவருக்கும் பணிவிடை செய்வது ஐஸ்வர்யா ராஜேஷின் முழு வேலையாக மாறிப்போகிறது. சமையல் அறையே கதியென இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அடக்கு முறை எல்லை மீற பிறந்த வீட்டில் புகலிடம் தேடுகிறார். அங்கும் அவருக்கு ஆதரவு குரல் கிடைக்காமல் போகிறது. இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன முடிவெடுக்கிறார் என்பதை பரபரப்பான திரைக் கதையில் சொல்லி இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு படத்தின் மொத்த சுமையையும் தாங்கிப் பிடிக்கும் ரோல். அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். கணவன் தாம்பத்தியத்திற்கு அழைக்கும் போது மாற்று வழி சொல்வதாகட்டும், உறவுகள் ஏளனப்படுத்தும்போது தீப்பிழம்பாக பார்ப்பதாகட்டும் சமையல், துணி துவைத்தல் என்று நொந்து போவதாகட்டும் எங்கும் உணர்வுகளை மிக சாதாரணமாக வெளிப்படுத்தி கவனிக்க வைக்கிறார்.

கணவன் காபி கேட்கும்போது பதிலடி தந்து புதுமைப் பெண்ணாக அதிர வைக்கிறார். கணவனாக வரும் ராகுல் ரவீந்தர் நாகரிக ஆண் உலகத்தை மிகச் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். மாமனாராக வரும் போஸ்டர் நந்தகோபால் சாதுவாக இருந்து காரியங்களை சாமர்த்தியமாக நடத்துவதில் கெட்டிக்காரராக இருக்கிறார்.

கலைராணி அதக்களம் பண்ணுகிறார். யோகி பாபு ஒரு சில இடங்களில் வந்தாலும் நிறைவு.

பெரும்பாலான காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பு தருகிறது. அதையும் மீறி குடும்ப அமைப்பில் பெண்கள் மீதான ஆணாதிக்க அடக்குமுறையை நேர்த்தியாக படம் பேசுகிறது.

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது. ஜெரி சில்வஸ்டர் வின்சென்ட் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் துள்ளல் ரகம். ஒரு வீடு, ஒரு சமையலறை, சில கதை மாந்தர்கள் என குறிப்பிட்ட எல்லைக்குள் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் ஆர். கண்ணன்.