சினிமா விமர்சனம்: பருந்தாகுது ஊர்க்குருவி
நடிகர்: விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ நடிகை: காயத்ரி ஐயர்  டைரக்ஷன்: தனபாலன் கோவிந்தராஜ் இசை: ரஞ்சித் உன்னி ஒளிப்பதிவு : அஷ்வின் நோயல்

காட்டுக்குள் விவேக் பிரசன்னாவை சிலர் சரமாரியாக அடித்து போட்டு இறந்து விட்டார் என்று உறுதிப்படுத்தி அங்கிருந்து கிளம்புகின்றனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் வருகிறது. சிறிய திருட்டு வழக்குகளில் சிக்கி போலீஸ் நிலையத்தில் இருக்கும் நிஷாந்த் ரூசோவை காட்டுக்குள் செல்ல வழிகாட்டும்படி இன்ஸ்பெக்டர் அழைத்து செல்கிறார்.

அங்கு பிணம்போல் கிடந்த விவேக் பிரசன்னா கையோடு நிஷாந்த் ரூசோ கையை இணைத்து கைவிலங்கு போட்டு பூட்டி விட்டு போன் பேசி விட்டு வருவதாக சொல்லி விட்டு செல்கிறார் இன்ஸ்பெக்டர். அப்போது விவேக் பிரசன்னாவுக்கு உயிர் இருப்பதை பார்த்து நிஷாந்த் ரூசோ அதிர்கிறார்.

கொலைகார கும்பல் மீண்டும் காட்டுக்குள் விவேக் பிரசன்னாவை தேடி வருகிறது. அவரை கொலை செய்ய ஆள் அனுப்பியது யார்? விவேக் பிரசன்னாவை நிஷாந்த் ரூசோ காப்பாற்றினாரா என்பதை திகிலுடன் சொல்கிறது மீதி கதை.

விவேக் பிரசன்னா கதாபாத்திரத்தில் கச்சிதமாக வருகிறார். அன்பான கணவனாக, உயிர்ப்பயத்தில் ஓடுபவராக, துரோகத்தில் மனம் உடைபவராக பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

விவேக் பிரசன்னாவை காப்பாற்றும் முயற்சியில் நிஷாந்த் ரூசோ சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார். கொலைகார கும்பலிடம் மோதும் காட்சிகளில் ஆவேசம் காட்டி உள்ளார்.

காதலியாக வரும் காயத்ரி ஐயரின் இன்னொரு முகம் மிரட்டல் வகை. போலீஸ் அதிகாரிகளாக வரும் ராட்சசன் வினோத், கோடங்கி வடிவேல், வில்லன்களாக வரும் கவுதம், ராஜேஷ், ஆனந்த், ஆதிக் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்

திரைக்கதையில் அங்கங்கே தொய்வு தெரிவது பலகீனம்.

காட்டுக்குள் நடக்கும் ஜீவ மரண போராட்டத்தை திகிலும் விறுவிறுப்புமாக கொடுத்து படத்தோடு ஒன்ற வைப்பதில் வென்று இருக்கிறார் இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ். ரஞ்சித் உன்னி பின்னணி இசை திகிலுக்கு உதவி உள்ளது. வனப்பகுதிக்குள் நடக்கும் அதிரடி கதையை படமாக்கியதில் அஷ்வின் நோயல் கேமரா நன்றாக உழைத்து இருக்கிறது.