வெள்ளி டம்ளரில் பால் குடிக்க மறுத்த எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் 29-5-1971 அன்று வெளியானது. அலங்காரில் 100 நாளைக் கடந்து ஓடியது. அப்போது அலங்கார் தியேட்டரை பி.வி.நடராஜனின் மகன் லயன் ராம்குமார் நிர்வகித்து வந்தார். அவருக்கு தற்போது 79 வயதாகிறது. அலங்காருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த தொடர்பு பற்றி அவரே இங்கு விளக்குகிறார்.

‘ரிக்ஷாக்காரன் படத்தின் வெற்றி விழாவிற்கு வருமாறு எம்.ஜி.ஆரை அழைத்தோம். அவரும் வருவதாக கூறியதுடன் 22-9-1971 அன்று எங்களது திரையரங்கிற்கு வந்தார். அப்போது அவர், சிறுசேமிப்புத் துறை தலைவராக இருந்தார். தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த ராஜாராமும் அவருடன் வந்திருந்தார்.

படம் தொடங்குதற்கு முன் திரை முன்பாக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் எம்.ஜி.ஆர். தோன்றி ரசிகர்களிடம் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் எங்களது வீட்டுக்கு வந்தார். நாங்கள் சாப்பிடும்படி வற்புறுத்தினோம். அவர், “ஒரு டம்ளர் பால் மட்டும் கொடுங்கள்” என்றார். அவர், காபி, டீ சாப்பிட மாட்டார். எனவே பால் மட்டும் போதும் என்றார்.

அன்போடு நாங்கள், வெள்ளி டம்ளரில் அவருக்குப் பால் கொடுத்தோம். அவர் குடிக்க மறுத்துவிட்டார். “எவர்சில்வர் டம்ளரில் கொடுத்தால் போதுமே!” என்றார்.

அவரது எளிமை எங்களுக்கு புரிந்தது. அவ்வாறே எவர்சில்வர் டம்ளரில் கொடுத்தோம். அன்போடு அவரும் பாலை வாங்கிக் குடித்தார். அதன்பிறகே எங்களது மனம் நிறைந்தது. பின்னர் எங்களுடன் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். மற்றொரு முறை எங்கள் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். வந்தபோது சிற்றுண்டி சாப்பிட்டுப் போனார்.

அதன்பிறகு சினிமா, அரசியல் என எந்த நிகழ்ச்சியாக அவர் சேலம் வந்தாலும், ஜானகி அம்மா எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார். எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு வரும் வரை எங்களது வீட்டிலேயேதான் அவர் இருப்பார். அவருடன் சுலோச்சனா சம்பத், அமைச்சர் முத்துசாமியின் மனைவி, சத்தியவாணி முத்து ஆகியோரும் வந்திருக்கிறார்கள். இவர்கள் 4 பேரையும் ‘கிச்சன் கேபினட்’ என்றுகூட அப்போது சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

எங்கள் தியேட்டரில் எம்.ஜி.ஆர். படம் திரையிட்டால் போதும், 2 நாட்களுக்கு ஒருமுறை அதிகாலையிலே போன் செய்வார். அல்லது அவரது உதவியாளர் போன் செய்து பேசுவார்.

எம்.ஜி.ஆர். பேசும் போது, “படம் எப்படி ஓடுகிறது? எந்த காட்சியை ரசிகர்கள் கைதட்டி ரசிக்கிறார்கள்?” என்பது போன்ற கேள்விகளைக் கேட்பார். நாங்களும் பதில் சொல்வோம்.

எங்கள் தியேட்டருக்கு மட்டும்தான் போன் செய்து பேசுகிறாரா என்பதை உறுதிசெய்ய, நாங்கள் மற்ற மாவட்டங்களில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களிடம் பேசிக் கேட்டால், இப்போதுதான், எம்.ஜி.ஆர். எங்களோடும் பேசினார் என்பார்கள். அவ்வளவு தூரம் அவருக்கு சினிமா மீது அக்கறை இருந்தது’ என நினைவு கூர்ந்தார்.