விஜயானந்த்,Vijayanand

தயாரிப்பு – விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ரிஷிகா ஷர்மா
இசை – கோபி சுந்தர்
நடிப்பு – நிஹால், அனந்த் நாக், சிரி பிரகலாத்
வெளியான தேதி – 9 டிசம்பர் 2022
நேரம் – 2 மணி நேரம் 39 நிமிடம்
ரேட்டிங் – 3/5

‘பயோபிக்’ படங்கள் கடந்த சில வருடங்களில் இந்திய அளவில் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. கன்னடத் திரையுலகத்திலிருந்து முதன் முதலில் தயாராகியுள்ள ஒரு பயோபிக் படம் என்ற பெருமையுடன் வெளிவந்துள்ளது ‘விஜயானந்த்’.

கர்நாடகாவில் ஒரு லாரியுடன் தனது வியாபாரத்தைத் துவங்கி இன்று இந்தியா முழுவதும் 5000க்கும் மேற்பட்ட லாரிகள், 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் என மிகப் பெரிய ‘லாஜிஸ்டிக்ஸ்’ கம்பெனியை உருவாக்கிய விஜய் சங்கேஷ்வர் பற்றிய பயோபிக் படம் இது. 1996ம் ஆண்டு கர்நாடகாவில் முதல் பாஜக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு நாளிதழை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி அதை வேறொரு நிறுவனத்திற்கு விற்று, ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு நாளிதழை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருபவர். ஒரு செய்தி சேனலும் அவர்களது நிறுவனம் சார்பில் நடந்து வருகிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை ரிஷிகா ஷர்மா என்ற பெண் இயக்குனர் நேர்த்தியான ஒரு படமாகக் கொடுத்திருக்கிறார்.

1960களின் பிற்பகுதி காலகட்டத்தில் படத்தின் கதை ஆரம்பமாகிறது. கர்நாடகாவின் சிறிய ஊரான கதக் என்ற ஊரில், அப்பாவின் பிரிண்டிங் பிரஸ் வேலைக்கு உதவியாக இருக்கிறார் விஜய் சங்கேஷ்வர். இன்னும் அதிகமாக பிரிண்டிங் செய்ய செமி ஆட்டோமேடிக் மெஷினை வாங்கி வந்து மேம்படுத்துகிறார். அடுத்து புதிதாக லாரி வாங்கி டிரான்ஸ்போர்ட் வியாபாரத்தில் இறங்க முடிவெடுக்கிறார். ஆனால், மார்க்கெட்டில் ஏற்கெனவே உள்ள போட்டியாளர்களால் அவருக்குப் பிரச்சினை வருகிறது. அதை எதிர்த்துப் போராடி மார்க்கெட்டில் உள்ள பெரிய மனிதர் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக தனது டிரான்ஸ்போர்ட்டை உயர்த்துகிறார். அதிலும் பிரச்சினைகள் வர மகன் உதவியுடன் சமாளிக்கிறார். அவரைப் பற்றியும், அவர்களது நிறுவனத்தைப் பற்றியும் தவறான செய்திகள் ஒரு தினசரி நாளிதழில் வெளியாகிறது. அதைச் சமாளிக்க சொந்தமாகவே ஒரு நாளிதழை ஆரம்பிக்கிறார். அதிலும் போட்டி நிறுவனத்தால் ஒரு சிக்கல் வர அந்தப் பத்திரிகையை விற்றுவிட்டு, ஒப்பந்தப்படி ஐந்து வருடங்கள் கழித்து வேறொரு பெயரில் மீண்டும் நாளிதழ் ஒன்றை ஆரம்பிக்கிறார். இப்படியான அவருடைய வியாபாரப் பயணம்தான் இந்த ‘விஜயானந்த்’.

படத்தில் 60களில் ஆரம்பித்து 70கள், 80கள், 90கள் என படிப்படியாக அடுத்த கால கட்டங்களை நோக்கி கதை நகர்கிறது. அந்தந்த காலத்துக்குரிய தோற்றங்களைத் திரையில் காட்ட இயக்குனர் உள்ளிட்ட அனைத்து குழுவினரும் ஈடுபாட்டுடன் கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. இப்படத்திற்காகவே அந்தந்த கால கட்டங்களைக் குறிப்பிடும் விதத்தில் பல அரங்குகளை உருவாக்கி படமாக்கியிருக்கிறார்கள்.

விஜய் சங்கேஷ்வர் கதாபாத்திரத்தில் நிஹால் நடித்திருக்கிறார். பொருத்தமான தேர்வு, எந்த ஒரு இடத்திலும் மிகையான நடிப்பை அவர் வெளிப்படுத்தவேயில்லை, அவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார். மற்றவர்கள் பார்வைக்கு ஆணவமாய் தெரிகிறார், தனது பார்வைக்கு நம்பிக்கையானவராய் தெரிகிறார் என மார்க்கெட்டின் பெரிய மனிதராய் இருக்கும் ரவிச்சந்திரன் ஒரு வசனம் பேசுவார். நமது பார்வைக்கும் அவரது நடிப்பு நம்பிக்கையாகவே தெரிகிறது.

விஜய் சங்கேஷ்வர் மகன் ஆனந்த் சங்கேஷ்வர் கதாபாத்திரத்தில் பாரத் போபனா, விஜய்யின் மனைவி லலிதாவாக சிரி பிரஹலாத், விஜய்யின் அம்மாவாக வினய பிரசாத் அந்தந்த கதாபாத்திரங்களில் பொருத்தமாய் நடித்திருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் மேலே சொன்னவர்களைக் காட்டிலும் தனது அனுபவ நடிப்பால் தனி முத்திரை பதிக்கிறார் விஜய்யின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்த் நாக். தன் ஆலோசனையை மீறி விஜய் வீட்டை விட்டுச் சென்றதால் அவர் மீது கோபத்தில் இருக்கிறார். ஆனால், அவரது அலுவலகத்திற்கு ஒரு முறை சென்று மகன் வளர்ச்சியைப் பார்த்து ஆனந்தப் பரவசம் அடைகிறார். அந்தக்காட்சிகள் எல்லாம் நெகிழ்வானவை.

கோபி சுந்தர் பின்னணி இசை, கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு, ஹேமந்த்குமார் படத்தொகுப்பு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு என அனைத்துமே படத்திற்குச் சிறப்பாக கை கொடுத்திருக்கின்றன.

கன்னடப் படம் என்றாலும் அதைத் தமிழ்ப்படுத்திய விதத்தில் கன்னட எழுத்துக்கள் வரும் இடங்களில் அவற்றைத் தமிழில் மாற்றியிருந்தால் இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக்கலாம். சினிமாத்தனம் இல்லாத கதை நகர்வும் கொஞ்சம் நெருடல்தான்.

புதிதாகத் தொழில் தொடங்க இருப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தபின் நம்பிக்கையுடன் அதில் களமிறங்குவார்கள். அந்த அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக உள்ளது இந்தப் படம்.

விஜயானந்த் – நம்பிக்கையான உழைப்பின் வெற்றி

Source: Cinema Dinamalar