'லியோ' படத்தில் நடன கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்பது தவறான தகவல் - ஆர்.கே.செல்வமணி அறிக்கை

‘லியோ’ படத்தில் நடன கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என சிலர் தவறான தகவலை பரப்புவதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான நடன கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற நடன கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவலை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லியோ’ படத்தில் நடன கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவலை பரப்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் இணைந்துள்ள உறுப்பினர்களுக்கு சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டதாகவும், அதே போல் உறுப்பினர் அல்லாதோருக்கும் அவரவர் வங்கி கணக்குகளில் தலா 10,500 ரூபாய் வீதம் செலுத்தப்பட்டுவிட்டதாகவும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.