'லியோ' இசை வெளியீட்டு விழா ரத்து விவகாரம் - ஐகோர்ட்டில் காவல்துறை விளக்கம்

‘லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சென்னை,

சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, கடந்த மாதமே பேரணிக்கு அனுமதி கேட்டு மனு அளித்ததாகவும், ஒவ்வொரு முறையும் மனுவை நிலுவையில் வைத்து கடைசி நேரத்தில் காவல்துறையினர் நிராகரிப்பதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணிக்கு அனுமதி கோரிய பாதையில் தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற அரசியல் கட்சி அலுவலகங்கள் இருப்பதாக குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அந்த பகுதிகளில் யாரும் நடக்ககூடாது என்று காவல்துறை தரப்பு சொல்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து இந்த மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 11-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அதே சமயம் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்காமல், கட்டுப்பாடுகள் விதித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் உத்தரவாதம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கலாம் என்று நீதிபதி யோசனை தெரிவித்தார்.

மேலும், ‘லியோ’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டின்போது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி ஆகியவற்றை காவல்துறையினர் சரியாக கையாளவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளித்த அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ‘லியோ’ டிரைலரை ரோகிணி திரையரங்கிற்கு வெளியே திரையிட அனுமதி கோரி எந்த விண்ணப்பமும் அளிக்கப்படவில்லை எனவும், அனுமதி கோரியிருந்தால் அது குறித்து பரிசீலிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார். அதே சமயம் திரையரங்குக்கு உள்ளே டிரைலரை திரையிட அனுமதி பெறத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘லியோ’ இசை வெளியீட்டு விழாவைப் பொறுத்தவரை, ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்தது போல் ரசிகர்கள் போலி டிக்கெட்டுகள் மூலம் உள்ளே புகுந்துவிடாத வகையில் கவனமாக இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியதாகவும், பின்னர் இசை வெளியீட்டு விழாவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ரத்து செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கும், காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தற்போது கூட அனுமதி கோரினால் பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் திரையரங்கில் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்றும், புகார் வராமல் நடவடிக்கை எடுத்தால் விஜய் ரசிகர்களுக்கு எதிராக செயல்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர், காவல்துறையை பொறுத்தவரை எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுப்பதில்லை என்று தெளிவுபடுத்தினார்.

இதையடுத்து நீதிபதி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்துதான் நீதிமன்றம் கவலை தெரிவித்ததாகவும், பத்திரிக்கைகளில் செய்தி வெளியானதால் இது குறித்து கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்தார்.