'லால் சலாம்' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த கபில்தேவ்..!

‘லால் சலாம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

சென்னை,

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘லால் சலாம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘லால் சலாம்’ படத்தின் டப்பிங் பணியை கபில்தேவ் நிறைவு செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.