ரஜினிக்காகவும், என் குடும்பத்திற்காகவும் முதல் பாடலை எழுதியுள்ளேன் - விக்னேஷ் சிவன்

‘ரத்தமாரே’ பாடல் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

சென்னை,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஷோகேஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் ‘ரத்தமாரே’ பாடல் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில், ‘ரத்தமாரே’ பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்பாடல் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக முதல் பாடலை எழுதியுள்ளேன். இதுவே என் குழந்தைகள் உயிர் மற்றும் உலகுக்கான முதல் பாடலாகவும் அமைந்துள்ளது. இது போன்ற தருணங்களுக்காக தான் வாழ்கிறோம். இயக்குனர் நெல்சன் மற்றும் அனிருத்திற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.