மீண்டும் ஹரி இயக்கும் படத்தில் விஷால்

ஹரி இயக்கிய `தாமிரபரணி’, `பூஜை’ ஆகிய படங்களில் விஷால் ஏற்கனவே நடித்துள்ளார். இந்தப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. தற்போது மீண்டும் ஹரி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கிறார். இதில் மேலும் பல முன்னணி நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் இணைகிறார்கள். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இந்தப் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் வழங்க, ஜீ ஸ்டூடியோசுடன் இணைந்து கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கிறார். படக்குழுவினர் கூறும்போது, “விறுவிறுப்பான திரைக் கதையில் படம் தயாராகிறது. இந்தப் படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் உற்சாகப் படுத்தும். பிரமாண்ட செலவில் தயாராகிறது.

படத்தில் பணியாற்றும் அனைவருக்குமே இது முக்கிய படமாக இருக்கும். சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் பரபரப்பான கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது” என்றனர். ஹரியின் முந்தைய படங்களைப்போல் அதிரடி சண்டைகள் நிறைந்த குடும்ப படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.