மன்னிக்கவும்...! ரெயில் படியில் இதற்காகத் தான் பயணம் செய்தேன்...!- சோனு சூட் விளக்கம்

ரெயில் படியில் பயணம் செய்த சோனு சூட்டுக்கு ரெயில்வே நிர்வாகம் கண்டனம் தெரிவித்தது. இதற்காகத்தான் பயணம் செய்தேன் மன்னிக்கவும் என கூறி உள்ளார்.

மும்பை

மும்பையில் புறநகர் ரெயில்களில் வாசலில் நின்று பயணம் செய்து ஒவ்வொரு ஆண்டும் பலர்உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்க ரெயில்வே நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனுசூட் ரெயிலின் வாசலில் அமர்ந்து மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்வது போன்ற ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்.

இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் வீடியோவை பார்த்த வடக்கு ரெயில்வே சோனுசூட்டை கடுமையாக விமர்சனம் செய்து டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “லட்சக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள்.

ரெயிலில் வாசலில் அமர்ந்து பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. உங்களது வீடியோ தவறான செய்தியை நாட்டிற்கு கொடுக்கும். இது மாதிரியான வீடியோ உங்களது ரசிகர்களுக்கு தவறான தகவலை கொடுக்கும். தயவு செய்து இது போல் செய்யாதீர்கள். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனரும் இது தொடர்பாக சோனுசூட்டை எச்சரித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான பயணம் என்றும், இது போன்ற காரியத்தில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

படங்களில் வேண்டுமானால் ரெயிலின் வாசலில் அமர்ந்து பயணம் செய்யலாம். படம் நிஜ வாழ்க்கை கிடையாது. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றும்படி மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சூனு சூட் இதற்கு பதில் அளிக்கும் போது இந்த வீடியோவிற்கு மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் லட்சக்கணக்கான ஏழைகள் இன்னும் ரெயில் கதவுகளுக்கு அருகில் அமர்ந்து பயணிப்பதை அனுபவிக்க விரும்புவதாக கூறினார்.மேலும் நாட்டின் ரெயில்வே அமைப்பை மேம்படுத்தியதற்கும் நன்றி என கூறினார்.

நடிகர் சோனு சூட், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து நாடு முழுவதும் பிரபலமடைந்தார். அதிலிருந்து சோனுசூட் எதைச்செய்தாலும் அது செய்தியாகி வருகிறது.

தற்போது கூட சோனுசூட் தொடர்ந்து தனது தொண்டு நிறுவனம் மூலம் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்து வருகிறார். அதோடு திரைப்பட ஆசையில் மும்பைக்கு வருபவர்களுக்கு உதவ தனி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.