பெரியார் போன்ற தலைவர்கள் குறித்து விஜய் பேசியது ரொம்ப நல்ல விஷயம் -  நடிகர் சத்யராஜ்

பெரியார், அம்பேத்கர்,காமராஜர் போன்ற தலைவர்களை கற்றுக்கொள்ளுங்கள் என்று விஜய் பேசியது ரொம்ப நல்ல விஷயம் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

சென்னை,

கோவையில் தனியார் நிகழ்சியில் பங்கேற்ற நடிகர் சத்யராஜிடம் நடிகர் விஜய்யின் கல்வி விருது நிகழ்வு குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்கு அவர் பதிலளித்து பேசியவதாவது:

மாணவ. மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் செய்தது மிகவும் ரொம்ப நல்ல விஷயம். அரசியலுக்கு வருவது பற்றி அவரே வெளிப்படையாக சொல்லாதபோது நான் அது குறித்து பேசுவது நன்றாக இருக்காது. அம்பேத்கர், பெரியார், காமராஜரை படிக்க வேண்டும் என்று விஜய் கூறியது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவரது கருத்தை வரவேற்கிறேன். அவர் இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்.

இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

மேலும், ‘லியோ’ பட போஸ்டரின் விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நடிகர்கள் தாங்கள் ஏற்று நடிக்கும் பாத்திரத்துக்கு ஏற்ப சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டியுள்ளது. நான் இப்போது வில்லனாக நடித்திருக்கும் ஒரு படத்தில் கூட புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. ‘மக்கள் என் பக்கம்’ என்ற படத்தில் நான் ஒரு கடத்தல்காரராக நடித்திருப்பேன். நடிப்பு வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு” என்றார்.