பெண் செயலாளருடன் தொடர்பா? இந்தி நடிகை ரேகா குறித்த சர்ச்சைக்கு மறுப்பு...!

ரேகா தனது பெண் செயலாளர் பர்சானாவுடன் நெருக்கமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது

இந்தி நடிகை ரேகாவின் சுயசரிதை புத்தகத்தை ‘தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் பிரபல எழுத்தாளர் யாசிர் உஸ்மான் எழுதி வெளியிட்டார்.

இந்த புத்தகத்தில் ரேகா தனது பெண் செயலாளர் பர்சானாவுடன் நெருக்கமாக இருந்ததாகவும், கணவர் முகேஷ் அகர்வாலின் தற்கொலைக்கு பர்சானாவும் காரணம் என்றும் இடம்பெற்றுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. மேலும் நடிகர்களுடன் ரேகா நெருங்கி பழகியுள்ளார் என்பது போலவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் இதனை எழுத்தாளர் யாசிர் உஸ்மான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ரேகா குறித்த நான் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் பெண் செயலாளருடன், அவர் தொடர்பில் இருந்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்கள் பொய்யானவை. பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி தவறான கருத்துகளை எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெளியிடுகிறார்கள். இதனை முற்றிலும் மறுக்கிறேன். அப்படி எந்த ஒரு தகவலும் புத்தகத்தில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளரின் இந்த விளக்கம் அனைத்து வதந்திகளையும் ஓரங்கட்டி இருக்கிறது.