பிரபல நடிகர் போலீசில் புகார்

பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. இவர் மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து காட்டமான கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் ஆவேசமாக பேசி வந்தார்.

இந்த நிலையில் சுராஜ் வெஞ்சாரமூடுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதுகுறித்து காக்கநாடு சைபர் கிரைம் போலீசில் சுராஜ் வெஞ்சாரமூடு புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில், “எனக்கு செல்போனில் வெவ்வேறு எண்களில் இருந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. கடந்த 3 நாட்களாக வாட்ஸ் அப் மூலமாகவும் சம்பந்தமில்லாதவர்கள் மிரட்டல் விடுக்கிறார்கள். மணிப்பூர் பெண்களுக்கு ஆதரவாக பேசிய நீ கேரள மாநிலம் ஆலுவாவில் ஐந்து வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டதை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்டு ஆபாசமாகவும் அவதூறாகவும் திட்டுகிறார்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது சமூக வலைத்தளத்தில் வந்துள்ள பதிவுகளையும் ஆராய்ந்து வருகிறார்கள்.