பிடிக்காத கதைகளில் நடிக்கவே மாட்டேன் - நடிகை டாப்சி

நடிகை டாப்சி சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் போது “கதை பிடிக்காவிட்டால் எந்த மொழி படத்திலும் நடிக்கவே மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த டாப்சி தற்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் டாப்சி கலந்துரையாடினார்.

அப்போது ஒரு ரசிகர் தெலுங்கு படங்களில் இப்போது நடிப்பது இல்லையே ஏன்? என்று கேட்ட கேள்விக்கு, “நான் என்ன செய்ய முடியும்? சரியான வாய்ப்புகள் வரவில்லை. அப்படியே வந்தாலும் கதைகள் சுத்தமாக பிடிக்கவில்லை. கதை பிடிக்காவிட்டால் எந்த மொழி படத்திலும் நடிக்கவே மாட்டேன்” என்று பதில் அளித்தார்.

இன்னொரு ரசிகர், “முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலேயே நடிக்கிறீர்களே? கமர்ஷியல் ஹீரோக்களுடன் நடிக்க மாட்டீர்களா? என்று கேட்டபோது,

“அதற்கு வாய்ப்புகள் வரவில்லை. வந்தால் நடிக்க ஆட்சேபம் இல்லை. என்னை பொறுத்தவரை சிறிய படங்களில் நடிப்பதே மனதுக்கு இதமாக இருக்கிறது. படங்களுக்கு ஏற்ற மாதிரிதான் எனது சம்பளம்கூட இருக்கும். சம்பளம் குறைவாக கிடைத்தாலும் சிறிய படங்களில் நடிப்பதில் ஆத்ம திருப்தி கிடைக்கும்.

சிறிய படங்களில் கதை முழுவதும் என்னையே சுற்றி வரும். எனக்காகவே ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வார்கள். அந்த பீலிங் கொடுக்கும் சுகம் சாதாரணமாக இருக்காது” என்றார்.