பள்ளி சாதி சண்டைக்கு படங்கள்தான் காரணம் - நடிகர் டெல்லி கணேஷ்

சினிமா சமூகத்துக்கு நல்லதை சொல்ல வேண்டும். அன்பு, பாசம், ஒற்றுமையை படங்களில் பேச வேண்டும்

நாங்குநேரியில் சாதி வெறியால் சின்னத்துரை என்ற மாணவரையும், அவரது தங்கையையும் சில மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் கண்டித்து உள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் சாதி சண்டைக்கு திரைப்படங்கள்தான் காரணம் என்று பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “மாணவர்கள் அரிவாளுடன் பள்ளிக்கு போகிறார்கள். பள்ளியில் சாதி சண்டை நடக்கிறது. அரிவாளை எடுத்து வெட்டுகிறார்கள். இதற்கு திரைப்படங்கள்தான் காரணம்.

சினிமா சமூகத்துக்கு நல்லதை சொல்ல வேண்டும். அன்பு, பாசம், ஒற்றுமையை படங்களில் பேச வேண்டும். அதைவிட்டு வேறு எதையோ காண்பிக்கிறார்கள். படங்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது. அதுமாதிரியான படங்கள் ஓடுகின்றன.

ஒரு கோஷ்டி தாக்கி படம் எடுப்பதை பார்த்து கோபித்து இன்னொரு கோஷ்டி வேறு மாதிரி தாக்கி படம் எடுக்கும். அப்படி தாக்கி படங்கள் எடுக்க கூடாது. எல்லோரும் ஒன்றுதான். எல்லோரும் வாழ்வது முக்கியம், நல்ல கதைகள் நிறைய இருக்கின்றன. அதை படமாக எடுக்கலாம். சினிமா துறையில் மாற்றம் வரவேண்டும்” என்றார்.