பரோல்,Parole

தயாரிப்பு – ட்ரிப்ர் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – துவாரக் ராஜா
இசை – ராஜ்குமார் அமல்
நடிப்பு – லிங்கா, ஆர்எஸ் கார்த்திக், கல்பிகா, மோனிஷா
வெளியான தேதி – 11 நவம்பர் 2022
நேரம் – 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் – 2.75/5

ஒரு படத்திற்கான டீசர், டிரைலர் மூலம்தான் இந்தக் காலத்தில் அந்தப் படத்திற்கான அறிமுகம் ரசிகர்களிடம் கிடைக்கிறது. இந்தப் பட டிரைலருக்கு விஜய் சேதுபதி தனது பின்னணிக் குரல் மூலம் கூடுதல் கவனத்தைக் கொடுத்தார். டிரைலரில் இருந்த வன்முறைக் காட்சிகள் அதைப் பார்த்தவர்களுக்கு நிறையவே அதிர்ச்சியைக் கொடுத்தது, அதே அதிர்ச்சி படத்தைப் பார்க்கும் போதும் வருகிறது.

‘காதல் கசக்குதய்யா’ படத்திற்குப் பிறகு இயக்குனர் துவாரக் ராஜா இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. ஒரு அம்மாவுக்கும், இரண்டு மகன்களுக்கும் இருக்கும் பாசம், மோதல் தான் இந்தப் படத்தின் கதை. வட சென்னை பின்னணியில், ரத்தம் தெறிக்கத் தெறிக்க இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். ஒரு பாசக் கதைக்குள் இவ்வளவு வன்முறைக் காட்சிகளா என்று கேட்க வைக்கிறார்.

வட சென்னையில் சாதாரண ஏழைக் குடும்பத்து அம்மா ஜானகி சுரேஷ். அவருடைய மகன்கள் லிங்கா, ஆர்எஸ் கார்த்திக். சிறு வயதிலேயே சில பல கொலைகளைச் செய்து தண்டனை அனுபவித்து தற்போது இரட்டை ஆயுள் தண்டனை பெற்று திருச்சி சிறையில் இருக்கிறார் மூத்த மகன் லிங்கா. இரண்டாவது மகன் கார்த்திக் பிளம்பிங் வேலை செய்து வருபவர். லிங்காவிற்காக கருணை மனு கொடுக்க ஆசைப்படும் ஜானகி திடீரென இறந்து போகிறார். அண்ணன் லிங்காவை அம்மாவின் இறுதிச் சடங்கு செய்வதற்காக கார்த்திக் பரோலில் எடுக்க முயற்சிக்கிறார். ஆனால், அதில் பல சிக்கல்கள் எழுகிறது. லிங்கா பரோலில் வந்தாரா, அம்மா இறுதிச் சடங்கைச் செய்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தக் கதையை நெகிழ வைக்கும் விதத்தில் அருமையான அம்மா, மகன்கள் பாசப் பிணைப்பு கதையாக மட்டுமே கூட கொடுத்திருக்க முடியும். ஆனால், அதை கிளமாக்சில் மட்டும் வைத்துவிட்டு, ஆரம்பம் முதல் கிளைமாக்சுக்கு முன்பாக வரை கொலை, கொலை, ரத்தம், கெட்ட வார்த்தைகள், வெளிப்படையாகச் சொல்கிறோம் என இதுவரை பார்க்காத சில ஆபாசக் காட்சிகள் என கரடு முரடான பாதையில் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். அடிக்கடி வரும் பிளாஷ்பேக் பாணியில் திரைக்கதை அமைத்துள்ள யுத்தி ரசிக்க வைக்கிறது. கடைசியில் சொல்ல வரும் ஒரு நல்ல விஷயத்திற்காக அவ்வளவு வன்முறைகளை வைக்க வேண்டுமா என்பது கேள்வி. இப்படி படம் எடுத்தால் கவனிக்கப்படுவோம் என இயக்குனர் துவாரக் ராஜா நினைத்திருக்கிறார்.

சிறு வயதில் சீர்திருத்தப் பள்ளியில் பாலியல் ரீதியாக கடுமையாக தாக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறார் லிங்கா. அந்தக் கொடுமை அவரை வெறி பிடித்தவனாக மாற்றி அங்கேயே சக மாணவர்களைக் கொல்ல வைக்கிறது. வளர்ந்து இளைஞனானதும் கூலிக்காக பல கொலைகளை செய்கிறார். அம்மா ஜானகி எவ்வளவோ சொல்லியும் மாற மாட்டேன் என்கிறார். இடையில் காதலும் வருகிறது. ஆனால், காதலி அவரைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார். மற்றொரு பக்கம் தம்பி கார்த்திக்குடன் சிறு வயது முதலே மோதல். பல எமோஷன்களைக் கொடுக்கக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் தனி நாயகனாக தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி இருக்கிறார் லிங்கா. “சேதுபதி, கஜினிகாந்த், சிந்துபாத், பெண்குயின், அனபெல் சேதுபதி” உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லிங்கா.

லிங்காவின் தம்பியாக ஆர்எஸ் கார்த்திக். அண்ணன் கொலை, ரவுடியிசம் எனப் போக தம்பி கார்த்திக்கோ பிளம்பிங் வேலை செய்து உழைத்து சாப்பிடுபவர். தன்னுடைய அம்மாவுக்கு தன்னை விட அண்ணன் மீதுதான் பாசம் அதிகம் என்ற பொறாமையில் இருப்பவர். இருந்தாலும் அம்மாவின் மரணத்திற்குப் பிறகு அண்ணன் லிங்கா வந்துதான் சடங்குகளைச் செய்ய வேண்டும் என பரோலை வாங்க என்னவெல்லாமோ செய்கிறார். உள்ளுக்குள் பாசம் இருந்தாலும் அண்ணன், தம்பிகளின் இந்த சண்டைகள் பல குடும்பத்தில் இருக்கும். இந்தப் படத்தில் அதை வேறு கோணத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

லிங்கா, கார்த்திக் ஆகியோரின் காதலிகளாக கல்பிக்கா, மோனிஷா முரளி. அதிகக் காட்சிகள் இல்லை என்றாலும் அவர்களுக்கும் ஸ்கோப் கிடைக்கும் விதத்தில் சில எமோஷனல் காட்சிகள் உண்டு. அம்மாவாக ஜானகி சுரேஷ். மகன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அவனை மாற்ற முடியும் என நம்பும் அதே வழக்கமான சினிமா அம்மா. படத்தில் வில்லன்களாக நடித்திருப்பவர்களும் கவனிக்க வைக்கிறார்கள். வக்கீலாக வினோதினி வழக்கம் போல இயல்பான நடிப்பு.

வட சென்னை என்றாலே இப்படித்தான் ரத்தமும், வெறியுமாக இருக்குமோ என்று பல படங்கள் வருகின்றன. கதைக்களம், லொகேஷன் என பலவற்றில் யதார்த்தப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். ஒரு ஆயுள் தண்டனை குற்றவாளிக்கு ‘பரோல்’ வாங்குவது எவ்வளவு சிரமம் என்பதை படம் மூலமாக ‘டீடெயிலிங்’ ஆகக் கொடுத்து ரசிகர்களுக்கும் புரிய வைக்கிறார். இசையமைப்பாளர் ராஜ்குமார் அமல், ஒளிப்பதிவாளர் மகேஷ் திருநாவுக்கரசு, எடிட்டர் முனீஸ், கலை இயக்குனர் அருண்குமார் ஆகியோரை நன்றாக வேலை வாங்கியிருக்கிறார்.

ஒரு சிறுவனிடம் சொல்லக் கூடாத விஷயங்களை பிளாஷ்பேக்காகச் சொல்வதெல்லாம் சரியா இயக்குனரே ?. சில கெட்ட வார்த்தைகளையும் சென்சாரில் கட் வாங்காமல் பேசி இடம் பெற வைத்துவிட்டீர்கள். சிலவற்றை வெளிப்படையாகச் சொல்கிறோம் என்பதை காட்சிகள் மூலம் சொல்லாமல் வசனங்கள் மூலமும் வெளிப்படுத்தி இருக்கலாம். ரவுடியிசம் வேண்டாம், சிறை என்பது ஒரு நரகம் என்பதை சொல்லும் கடைசி கட்டக் காட்சிகளுக்குப் பாராட்டுக்கள்.

பரோல் – பாசத்தின் பரிதவிப்பு

Source: Cinema Dinamalar