படம் தோல்வியால் சம்பளத்தை திருப்பி கொடுத்த சிரஞ்சீவி...!

வேதாளம் படத்தை தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்து சிரஞ்சீவி நடித்து இருந்தார்

தமிழில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வேதாளம் படத்தை தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்து சிரஞ்சீவி நடித்து இருந்தார். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்து தோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனாலும் பேசிய சம்பளம் முழுவதையும் சிரஞ்சீவி வாங்கி விட்டார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதனை படத்தின் தயாரிப்பாளர் அனில் சுங்கரா மறுத்து இருந்தார்.

ஏற்கனவே கடந்த பொங்கல் பண்டிகையில் வெளியான வால்டர் வீரய்யா படத்தில் நடிக்க சிரஞ்சீவி ரூ.50 கோடி சம்பளம் வாங்கினார். அந்த படம் வெற்றி பெற்றதால் போலா ஷங்கர் படத்துக்கு ரூ.60 கோடி வாங்கி இருக்கிறார்.

படப்பிடிப்பு நடந்தபோதே ரூ.50 கோடியை சிரஞ்சீவிக்கு தயாரிப்பாளர் கொடுத்து விட்டார். மீதி ரூ.10 கோடிக்கு காசோலை கொடுத்து இருந்தார். படம் தோல்வி காரணமாக ரூ.10 கோடி சம்பள காசோலையை தயாரிப்பாளர் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அவரிடமே சிரஞ்சீவி திருப்பி கொடுத்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சிரஞ்சீவியை வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.