நடிகை கனகாவா இது...? குட்டி பத்மினி பகிர்ந்த புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

நடிகை கனகாவுடன் எடுத்த புகைப்படத்தை குட்டி பத்மினி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

தமிழில் ‘கரகாட்டக்காரன்’, ‘அதிசய பிறவி’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை கனகா. இவர் கடைசியாக 2000-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நரசிம்மம்’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் திரையுலகிலிருந்து விலகியிருக்கும் கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.

திரைப்படத்தில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் அப்பாவுடன் சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை, கை கூடாத காதல் எனப் பல பிரச்சினைகளால் வீட்டில் முடங்கிய நிலையிலேயே இருந்துள்ளார் கனகா. இதனால் பல வருடங்களாக அவர் தனிமை வாழ்க்கையே வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நடிகை கனகாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவர் அந்த பதிவில், ‘பல வருடங்களுக்குப் பிறகு என் அன்புக்குரிய தேவிகா அம்மாவின் மகள், என் அன்புக்குரிய சகோதரி கனகாவை மீண்டும் சந்தித்தேன். இந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது’ என்று பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் கனகாவா இது..? என்று அதிர்ச்சி அடைந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை கனகாவின் புகைப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அந்த பதிவை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.