நடிகர் மன்சூர் அலிகான் காவல்நிலையத்தில் ஆஜர்

மன்சூர் அலிகான் சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார்

சென்னை,

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில், தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.திரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். மேலும் பல ரசிகர்கள், மன்சூர் அலிகானின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது என்று தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தனர்.

தொடர்ந்து நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி அவருக்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்மன் வழங்கினர்.

மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. முன்ஜாமின் மனுவில் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையம் என்பதற்கு பதிலாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் என குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறி தனது முன்ஜாமினை அவர் வாபஸ் பெற்றார். பின்னர் புதிய மனுவை அவர் தாக்கல் செய்தார்.

இதற்கு நீதிபதி அல்லி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் .மேலும் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த புதிய முன்ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் , மன்சூர் அலிகான் சென்னை, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தற்போது ஆஜராகியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.