துரிதம்: சினிமா விமர்சனம்
நடிகர்: ஜெகன் நடிகை: ஈடன்  டைரக்ஷன்: சீனிவாசன் இசை: நரேஷ் ஒளிப்பதிவு : வாசன், அன்பு

சென்னையில் வாடகை கார் ஓட்டும் ஜெகன், அவரது காரில் தினமும் அலுவலகம் செல்லும் நாயகி ஈடனை ஒரு தலையாக காதலிக்கிறார். தீபாவளி நெருங்கும்போது தந்தையின் நிர்ப்பந்தத்தினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு கிளம்ப தயாராகிறார் ஈடன். கடைசியாக அவரிடம் காதலை சொல்லி விட வேண்டும் என்ற ஜெகன் முயற்சி தோல்வியில் முடிகிறது.

இந்த நிலையில் ஈடன் ரெயிலை தவற விட மதுரைக்கு புறப்படும் ஜெகனை அழைத்து அவரது பைக்கிலேயே பின்னால் உட்கார்ந்து செல்கிறார். வழியில் பைக் பழுதாகி நிற்க பயங்கரம் நடக்கிறது. அந்த வழியாக காரை ஓட்டிக்கொண்டு வரும் ராம்ஸிடம் லிப்ட் கேட்கின்றனர். அவருக்கு ஈடன் மீது சபலம் வருகிறது. காரை நிறுத்தி ஈடனை மட்டும் ஏற்றிக் கொண்டு கடத்தி விடுகிறார்.

ஈடனை ஜெகன் தேடி அலைகிறார். கண்டுபிடித்தாரா? காதல் என்ன ஆனது என்பது மீதி கதை…

கார் டிரைவராக வரும் ஜெகன் அமைதியான அழுத்தமான நடிப்பால் மனதில் நிற்கிறார். நாயகியின் பார்வைக்காக ஏங்குவது, காதல் தோல்வியில் உடைவது, நாயகியை கடத்தியதும் பதறுவது என்று அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நாயகி ஈடன் உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கி உள்ளார். கைகால்களை கட்டி காரில் கடத்தியதும் தப்பிக்க போராடி பதற்றம் காட்டுகிறார்.

பால சரவணன் நகைச்சுவை ஏரியாவை கலகலப்பாக வைத்துள்ளார். சந்தேக தந்தையாக வரும் வெங்கடேஷ் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ரெயிலில் வருவதாக பொய் சொல்லி விட்டு பைக்கில் பயணப்படும் ஈடன் வெங்கடேஷிடம் சிக்கி விடுவாரோ என்ற படப்படப்பை ஏற்படுத்தும் பிற்பகுதி திரைக்கதை பலம். தோழிகளாக வரும் வைஷாலி, ஸ்ரீ நிகிலா, ஐஸ்வர்யா மற்றும் பூ ராமு, ராம்ஸ் கதாபாத்திரங்களும் நிறைவு.

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் போகப்போக கதைக்குள் இழுத்துக் கொள்கிறது.

கிளைமாக்சில் ஜெகனும் ஈடனும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே காரிலும், பைக்கிலும் பிரியும் அந்த காட்சி மனதை கனக்க செய்யும் ரகம்.

காதல் கதையை பிசிறு இல்லாமல் கவித்துவமாக படம்பிடித்து கவனம் பெற்றுள்ளார் இயக்குனர் சீனிவாசன்.

பைபாஸ் சாலை பயண காட்சிகளை படமாக்கியதில் வாசன் மற்றும் அன்புவின் கேமரா உழைத்து இருக்கிறது.

நரேஷ் பின்னணி இசை கதையோடு ஒன்ற வைத்துள்ளது.