தீராக் காதல்: சினிமா விமர்சனம்
நடிகர்: ஜெய் நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா  டைரக்ஷன்: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ரோகின் வெங்கடேசன் இசை: சித்துக்குமார் ஒளிப்பதிவு : ரவிவர்மன் நீலமேகம்

ஜெய்யும், ஐஸ்வர்யா ராஜேசும் கல்லூரி காதலர்கள். சூழ்நிலையால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். ஷிவதாவை ஜெய்யும், அம்ஜத்கானை ஐஸ்வர்யா ராஜேசும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஜெய் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுமைக்கார கணவனால் சித்ரவதையை அனுபவிக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஜெய் அலுவலக வேலையாக மங்களூருக்கு செல்லும்போது, ஐஸ்வர்யா ராஜேஷை சந்திக்க நேர்கிறது. அப்போது அவர்களின் பழைய காதல் மீண்டும் உயிர்பெறுகிறது. தனது கணவரின் கொடுமைகளை ஜெய்யிடம் சொல்லி ஆறுதல் தேடுகிறார். ஜெய்யும் மனரீதியாக தைரியம் கொடுத்து தேற்றுகிறார்.

அப்போது இருவரும் உடல்ரீதியாக எல்லை மீறும் நிலை வர தவறை உணர்ந்து பிரிகிறார்கள். ஜெய் சென்னை திரும்புகிறார். தன்னை அடித்து துன்புறுத்தும் கணவனை விட்டு விலகி மீண்டும் ஜெய் வாழ்க்கையில் நுழைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனால் இருவரின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது கதை.

ஜெய்க்கு மவுனராகம் மோகன்போன்று அழகான கதாபாத்திரம். அதற்கு இணையான நடிப்பை அவரும் வெளிப்படுத்தி இருக்கிறார். குழந்தைக்கு தந்தையாக நல்ல கணவனாக ஜெய் காட்டி இருக்கும் நடிப்பை நன்றாகவே ரசிக்க முடிகிறது. பழைய காதலியை சந்திக்கையில் வரும் உணர்வுகளை அம்சமாக வெளிப்படுத்தி உள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேசுக்கு சவாலான கதாபாத்திரம். அதில் பிரமாதமான நடிப்பை கொடுத்து படம் முழுவதும் வியாபித்து உள்ளார். கணவனின் கொடுமைகளை எதிர்கொள்வது, காதலனை புரிந்து கொண்டு தவிப்பது என்று உணர்வுகளை கொட்டி நடித்து இருக்கிறார். ஜெய் மனைவியாக வரும் ஷிவதா கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பை கொடுத்து மனதில் நிற்கிறார். அம்ஜத்கான் கொடுமைக்கார கணவனாக வில்லத்தனம் செய்கிறார்.

சில இடங்களில் யதார்த்தம் மீறிய காட்சிகளை வலிய திணித்து இருப்பது நெருடல்.

இயக்குனர்கள் ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ரோகின் வெங்கடேசன் இருவரும் சிறந்த காதல் கதையை சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள். அமைதியான கதாபாத்திரங்களுடன் வாழ்வது போன்ற உணர்வை திரைக்கதை தருகிறது. ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு பல இடங்களில் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. சித்துக்குமார் பின்னணி இசை ஒன்ற வைக்கிறது.