தளபதி 68: பூஜை போட ஸ்க்ரிப்டை கேட்ட தயாரிப்பு நிறுவனம்; நகைச்சுவையாக பதில் அளித்த வெங்கட்பிரபு

பூஜை போட தளபதி 68 ஸ்க்ரிப்டை கேட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு, இயக்குநர் வெங்கட்பிரபு நகைச்சுவையான பதிலை கொடுத்துள்ளார்.

சென்னை,

‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படம் குறித்த அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்ட நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து உள்ளது. அந்த வகையில், இன்று முதல் (அக்டோபர் 24) ‘தளபதி 68’ தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகும் என்று ஏ.ஜி.எஸ். நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இன்று விஜயதசமி என்பதால் படத்தின் ஸ்க்ரிப்டை வைத்து பூஜை செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. இந்நிலையில் நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைத்தளம் மூலம் படத்தின் ஸ்க்ரிப்டை தருமாறு இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் கேட்டது. இதற்கு, இது ஒரு நல்ல கேள்வி மேலும் சரியான கேள்வி, அதாவது என்ன பிரச்சினை என்றால், கரெக்சன் சொல்லமாட்டேனு சத்தியம் பண்ணுங்க , ஸ்க்ரிப்ட் ஆபீஸ்ல எங்க இருக்குனு சொல்றேன், ஸ்கிரிப்ட் எப்பவோ ரெடி, என்று ஜாலியாக பதிவிட்டிருந்தார்.