தசரா : சினிமா விமர்சனம்
நடிகர்: விஜய் ஆண்டனி நடிகை: ரம்யா நம்பீசன்  டைரக்ஷன்: பாபுயோகேஸ்வரன் இசை: இளையராஜா ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர்

நேர்மையான போலீஸ் அதிகாரி விஜய் ஆண்டனி. அவருடைய மனைவி ரம்யா நம்பீசன். இவர்களின் ஒரே மகனான சிறுவனுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது. மாற்று இதயம் பொருத்த அதிக செலவாகும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் சொல்கிறது. பின்னர் சிறுவனுக்கு ஏற்பாடு செய்த இதயத்தை பணம் அதிகம் கொடுப்பதால் அமைச்சர் ஒருவருக்கு பொருத்த ஏற்பாடு நடக்கிறது.

இதனால் அதிர்ச்சியாகும் விஜய் ஆண்டனி டாக்டர் ஒருவரை பிணை கைதியாக வைத்து மகனுக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கிறார். அது கைகூடியதா என்பது கிளைமாக்ஸ்.

போலீஸ் அதிகாரிக்கான உடல்மொழி, உடற்கட்டு என எல்லாவிதத்திலும் தன்னை பொருத்திக்கொள்ளும் விஜய் ஆண்டனியின் நடிப்பு அற்புதம். மனைவியிடம் அன்பு காட்டுவதும், மகனிடம் பாசத்தைக் கொட்டுவதும், வேலையில் நேர்மை தவறாமல் இருப்பதும் என தமிழரசன் கேரக்டருக்கு குந்தகம் வராமல் பார்த்துகொள்கிறார்.ஆக்ஷன் காட்சிகளிலும் ஒரு கை பார்க்கிறார்.

அழகான இல்லத்தரசி கேரக்டருக்கு நூறு சதவீதம் நியாயம் செய்திருக்கிறார் ரம்யா நம்பீசன். குழந்தையின் நிலையை கண்டு ஏங்குவது, மிரட்டுபவர்களை நெஞ்சை நிமிர்த்தி மிரளச் செய்வது என கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார்.

டாக்டராக வரும் சுரேஷ் கோபி அனுபவ நடிப்பால் கேரக்டரை வலுவாக தாங்கி பிடித்துள்ளார். ராதாரவி, சோனு சூட், சங்கீதா, சாயா சிங், கஸ்தூரி, முனீஸ்காந்த், மாஸ்டர் பிரணவ், ஓய்.ஜி.மகேந்திரன் என அனைவரும் கேரக்டரை மெருகேற்றும் விதமாக சிறப்பாக நடித்துள்ளனர்.

நோயாளியாக வந்தாலும் சிரிக்க வைக்கும் வேலையை சரியாக செய்துள்ளார் யோகிபாபு. ரோபோ சங்கரும் கூடுதலாகவே சிரிக்க வைக்கிறார். திரைக்கதையை இன்னும் வலுவாக செதுக்கி இருக்கலாம்.

இளையராஜா இசை பலம். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் திரைக்கதையின் ஓட்டத்தை திசை திருப்பாமல் யதார்த்தமாகவும் நுணுக்கங்களோடும் படமாக்கியுள்ள விதம் சிறப்பு.

மகனை காப்பாற்ற நினைக்கும் தந்தையின் கதையில் ஆஸ்பத்திரிகளில் நடக்கும் தில்லுமுல்லுகளை குடும்ப சென்டிமென்டுடன் கலந்து ஜனரஞ்சக படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாபுயோகேஸ்வரன்.