ஜெயலலிதா பார்த்து ரசித்தார்

சென்னைக்கு அடுத்தப்படியாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட தியேட்டர் என்பதால், அலங்கார் தியேட்டருக்கு வருவதற்கு நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். அந்த நினைவுகளை லயன் ராம்குமார் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

‘ஒருமுறை ஏற்காட்டுக்கு படப்பிடிப்பிற்கு வந்த ஜெயலலிதா, தன்னுடைய தாயார் சந்தியாவுடன் எங்களது தியேட்டருக்கு வந்தார். அப்போது எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்த ‘என் அண்ணன்’ எங்களது தியேட்டரில் ஓடிக்கொண்டு இருந்தது. எம்.ஜி.ஆருக்கு 109 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து இருந்தோம். அந்தக் கட்-அவுட் உலகத்தில் 2-வது உயரமான கட்-அவுட் என்று ‘இல்லஸ்டடு வீக்லி’ ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டு இருந்தது. அதனைப் பார்த்த எம்.ஜி.ஆர். எங்களது தியேட்டருக்கு போன் செய்து எங்களை மனதார பாராட்டியதை மறக்க முடியாது.

எங்களது தியேட்டருக்கு வந்த ஜெயலலிதா, அந்தக் கட்-அவுட்டை நேரில் பார்த்தார். பின்னர் தியேட்டரில் அமர்ந்து, என் அண்ணன் படத்தைப் பார்த்து ரசித்தார். புகைப்படமும் எடுத்துக் கொண்டார். சென்னையில் உள்ள தியேட்டரில் படம் பார்த்தது போல் இருந்ததாக எங்களிடம் கூறினார்.

இன்னொன்றை இங்கு நினைவு படுத்த வேண்டும். அன்றைக்கு குளிர்சாதன வசதி செய்து இருந்ததால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, தியேட்டருக்கு அழைத்து வரவேண்டாம் என அறிவிப்பே செய்து இருந்தோம். ஏனென்றால் முதலில் குழந்தைகளையும் அனுமதித்தோம். அப்போது சில குழந்தைகளுக்கு ஒவ்வாமையால் பிரச்சினை ஏற்பட்டது. அதன்பிறகு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நாங்கள் தியேட்டருக்குள் அனுமதிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்தோம். அன்றைய நாட்களை நினைத்து பார்த்தால் இன்னமும் வியப்பாகவே இருக்கிறது’ என சிலாகித்து கூறி முடித்தார்.