செம்பி : சினிமா விமர்சனம்
நடிகர்: விவேக் ராஜகோபால் நடிகை: லாவண்யா  டைரக்ஷன்: யுவராஜ் இசை: குமரன் சிவமணி ஒளிப்பதிவு : மணிகண்ட ராஜா

நாயகன் விவேக் ராஜகோபால் வங்கி அதிகாரி. அவருக்கு மனைவி, குழந்தை என்று அழகான குடும்பம். செய்யும் தொழிலில் நேர்மையாக இருக்கும் விவேக் ராஜகோபாலுக்கு பல கோடி ரூபாய் பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு மாற்றும்படி வில்லனிடம் இருந்து மிரட்டல் வருகிறது.

குடும்பத்தை காலி செய்து விடுவோம் என்று துப்பாக்கி முனையில் மிரட்டி பணியவும் வைக்கிறது. பணம் கிடைத்த பிறகு விவேக் ராஜகோபாலை கடத்தி சென்று விடுகின்றது வில்லன் கோஷ்டி.

கணவனை மீட்க பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரிடம் உதவி கேட்கிறார் மனைவி. அந்த நபரின் பின்புலம் என்ன? அவரால் விவேக் ராஜகோபாலை மீட்க முடிந்ததா? என்பதை திடீர் திடீர் திருப்பங்கள் மூலம் விவரிக்கிறது கதை.

நாயகன் விவேக் ராஜகோபால் அப்பாவி கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். குடும்பத்தையும் வங்கியையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர் வெளிப்படுத்தும் உடல் மொழியும் கச்சிதம். இளம் வயதாக வரும் கதாபாத்திரத்தில் அதிரடியில் அமர்க்களம் செய்கிறார்.

நாயகி லாவண்யா சில இடங்களில் மட்டுமே வந்தாலும் நடிப்பிலும் தோற்றத்திலும் ஸ்கோர் செய்கிறார். இன்னொரு நாயகியாக வரும் ஐஸ்வர்யா தத்தாவும் நடிப்பில் கவர்கிறார்.

முன்னாள் வில்லனாகவும் இந்நாள் நல்லவனாகவும் வரும் முரட்டு மனிதன் கேரக்டருக்குள் கச்சிதமாக பொருந்திக் கொள்கிறார் சி.எம்.பாலா. ராஜ் காலேஷ் வில்லத்தனத்தில் குறையொன்றுமில்லை.

ஒளிப்பதிவாளர் மணிகண்ட ராஜா காடு, மேடு, இருள் என எல்லா இடத்திலும் தன்னுடைய கேமரா வித்தையை காண்பித்து படத்தை மெருகேற்றியுள்ளார்.

இசையமைப்பாளர் குமரன் சிவமணி அறிமுக படத்திலேயே நூறு மார்க் வாங்கியுள்ளார். இவருடைய தந்தை பிரபல ‘டிரம்ஸ்’ கலைஞர் சிவமணி.

சில இடங்களில் திரைக்கதையில் தொய்வு தெரிகிறது

அப்பாவி ஹீரோ, எதற்கும் துணிந்த குணச்சித்திர நடிகர், கொடூரமான வில்லன் என்று வித்தியாசமான கேரக்டர்களை வைத்து சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்லி கவனிக்க வைக்கிறார் இயக்குனர் யுவராஜ்.