சிலருக்கு கடைசி படமாகி போன 'இந்தியன்-2'... அறிமுக வீடியோவில் இடம்பெற்ற மறைந்த நடிகர்கள்...!

இந்தியன்-2 படத்தின் அறிமுக வீடியோவில் மறைத்த நடிகர்கள் சிலரின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி, தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இதனிடையே சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகளை கமல்ஹாசன் தொடங்கினார்.

இந்நிலையில் ‘இந்தியன்-2’ படத்தின் அறிமுக விடியோவை நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் வெளியிட்டார். இந்த வீடியோவில் மறைத்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நடிகர்களுக்கு இந்தியன்-2 திரைப்படம் தான் இறுதி படமாக அமைந்துள்ளது.

இந்தியன்-2 அறிமுக வீடியோவில் மறைத்த நடிகர்கள் மனோபாலா, விவேக், மாரிமுத்து, நெடுமுடி வேணு

இதனை அடுத்து ரசிகர்கள் அந்த காட்சிகளை இணையத்தில் பகிர்ந்து தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த படம் கடைசி படமாக இருக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.