சினிமா விமர்சனம்: ராயர் பரம்பரை
நடிகர்: கிருஷ்ணா நடிகை: சரண்யா  டைரக்ஷன்: ராம்நாத் இசை: கணேஷ் ராகவேந்திரா ஒளிப்பதிவு : விக்னேஷ் வாசு

கிருஷ்ணா, ராஜேந்திரன், ஆனந்த்ராஜ்இசை கல்லூரியில் படித்த கிருஷ்ணா படிப்பு முடிந்ததும் மியூசிக் கிளாஸ் நடத்துகிறார். அந்த ஊர் பெரிய மனிதர் ஆனந்த்ராஜ் காதலை வெறுக்கிறார். காதல் ஜோடிகளை ஆள் வைத்து பிடித்து மறைமுகமாக கட்டாய திருமணமும் செய்து வைக்கிறார். தனது தங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவரிடமும் பகையை வளர்த்து பேசாமல் இருக்கிறார்.

இந்த நிலையில் ஆனந்த்ராஜின் மகள் சரண்யாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்கிறது. காதலர்கள் இருவருமே காதலுக்கு எதிரியாக விளங்கும் ஆனந்த்ராஜின் நடவடிக்கைக்கு பயந்து காதலை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இறுதியில், காதலர்களால் ஒன்று சேர முடிந்ததா, அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சி என்ன என்பது மீதி கதை.

துறுதுறு இளைஞன் வேடத்தில் தூள் கிளப்புகிறார் கிருஷ்ணா. காதல், அடிதடி என அனைத்திலும் வேகம் காட்டி கேரக்டரை ரசிக்க வைக்கிறார். இவரும் நான் கடவுள் ராஜேந்திரனும் அடிக்கிற லூட்டி ரசிக்க வைக்கிறது.

ஹோம்லி லுக்கில் வரும் சரண்யா அம்சமான அழகு. அப்பாவை கண்டு மிரள்வது, கிருஷ்ணாவிடம் காதல் மொழி பேசுவது என நடிப்பில் கவர்கிறார் இந்த புது வரவு.

நான் கடவுள் ராஜேந்திரன் படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார். ஜோசியராக வரும் மறைந்த மனோபாலாவும் தனது பாணியிலான நடிப்பால் கலகலக்க வைக்கிறார்.

வில்லனாக வரும் ஆனந்த்ராஜ், அவருடைய கூட்டாளிகளாக வரும் ஆர்.என்.ஆர் மனோகர், பாவா லட்சுமணன், சேஷு, கிருஷ்ணாவின் நண்பர்களாக வரும் தங்கதுரை, வினோத், கே.ஆர்.விஜயா, கஸ்தூரி, கிருத்திகா, அனுஷ்லா ஜித்தேஷ், ஷர்மிளா, மிப்பு என அனைவரும் தங்கள் பங்கை முடிந்தளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

திரைக்கதையில் பிற்பகுதியில் இருக்கும் வேகத்தைப்போல் முதல் பகுதியையும் கூர்மையாக செதுக்கி இருக்கலாம்.

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசையும் ஈர்க்கிறது. படம் முழுவதையும் பச்சை பசேலன காண்பித்து கண்களுக்கு விருந்து படைத்துள்ளது விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு.

லாஜிக் பார்க்காமல் ரசிகர்களை எப்படியாவது சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படம் எடுத்துள்ளார் இயக்குனர் ராம்நாத். கதையும் காட்சிகளும் சிரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது.