சினிமா விமர்சனம்: சிறுவன் சாமுவேல்
நடிகர்: அஜிதன் தவசிமுத்து  டைரக்ஷன்: சாது பெர்லிங்டன் இசை: ஸ்டான்லி ஜான், சாம் எட்வின் மனோகர் ஒளிப்பதிவு : சிவானந்த் காந்தி

ஏழை குடும்பத்தை சேர்ந்த சிறுவன் சாமுவேலுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம். கிரிக்கெட் மட்டை வாங்கித்தர பெற்றோரிடம் கேட்கிறான். அவர்கள் மறுக்கின்றனர். கிரிக்கெட் கார்டுகளை சேகரித்து கடையில் கொடுத்தால் சச்சின் தெண்டுல்கர் கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டை இலவசமாக கிடைக்கும் என்று பள்ளி வேன் டிரைவர் சொல்கிறார். உடனே கிரிக்கெட் கார்டுகளை சேகரிக்க தொடங்குகிறான்.

அதற்கு நண்பன் சிறுவன் ராஜேஷ் உதவுகிறான். இடையில் சாமுவேல் செய்யும் ஒரு தவறினால் ராஜேஷ் படிப்பை நிறுத்த வேண்டி வருகிறது. சாமுவேலால் கிரிக்கெட் கார்டுகளை சேகரித்து கிரிக்கெட் மட்டை வாங்க முடிந்ததா? என்பது மீதி கதை.

சாமுவேலாக வரும் அஜிதன் தவசிமுத்து பிஞ்சு வயதில் பழுத்த நடிப்பை கொடுத்து இருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. குறும்புத்தனமான பார்வையோடு நண்பனாக வரும் சிறுவன் விஷ்ணுவின் நடிப்பும் பிரமாதம். இவர்கள் இருவரும் பெரியவர்களின் நட்பு தோற்று போகும் அளவுக்கு தோழமையில் புது இலக்கணம் கற்பித்துள்ளனர்.

பணக்கார வீட்டு பையனாக வரும் சிறுவன், டியூஷன் ஆசிரியை, சந்தேக கண்ணோடு பார்க்கும் பெண் உள்பட படத்தில் வரக்கூடிய அனைவரும் சினிமாத்தனம் இல்லாமல் தங்கள் பங்கை மிக அழகாக வெளிப்படுத்தி படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள். அபர்ணா ஜெபா, மெர்சின், ஜெனிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குமரி வட்டார மொழியில் மலையாள வாடை தூக்கலாக இருப்பதால் சில இடங்களில் புரிவதில் சிரமம் இருக்கிறது.

இசையமைப்பாளர்கள் ஸ்டான்லி ஜான், சாம் எட்வின் மனோகர் கதையை மீறாமல் தேவையான இசையை அற்புதமாக கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சிவானந்த் காந்தி கொடுத்த பட்ஜெட்டில் மிக அழகாக வாழை தோப்பு, ஓடை, பாசாங்கு இல்லாத மக்கள் என அழகியலோடு படம் பிடித்து இருக்கிறார்.

சிறுவர்களின் உலகம் அவர்கள் பார்வையில் எத்தனை கபடமில்லாதது என்பதை ஜீவனுள்ள எளிய திரைக்கதையில் யதார்த்தமாக சொல்லி சிறந்த படைப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் சாது பெர்லிங்டன். கதாபாத்திரங்களின் வாழ்வியலோடு பார்வையாளர்களை ஒன்றவைத்து இருப்பது இயக்குனரின் வெற்றி.

இன்னொரு பசங்க.