சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் நடிகர் விஜய் பேச்சு குறித்த ஹேஷ்டேக்..!!

வாழ்க்கையில் பெரிய விஷயங்களுக்கு ஆசைப்பட வேண்டும்’ என ‘லியோ’ பட வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசினார்.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படம் கடந்த மாதம் 19-ந்தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே வெளியான ‘லியோ’ படம் ஒரு வாரத்திலேயே ரூ.461 கோடி வசூலை வாரி குவித்தது. தற்போது வசூல் ரூ.600 கோடியை தாண்டியும் விட்டது.

ஏற்கனவே லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இந்த விழாவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த படத்தின் வெற்றி விழாவை நிபந்தனைகளுடன் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.

அதன்படி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டு 3 மணி நேரத்துக்கு முன்பாகவே நடிகர் விஜய் நேரு ஸ்டேடியத்துக்கு வந்தார். அங்கு படக்குழு மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன், விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தார். இரவு 6.50 மணிக்கு விழா நடைபெறும் இடத்துக்கு நடிகர் விஜய் வந்தார்.

விழாவில் நடிகர்கள் அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, மடோனா செபாஸ்டியன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், “நான் தான் உங்கள என் நெஞ்சுல குடி வச்சுருக்கேன்னு நெனச்சேன். நீங்கதான் என்னை நெஞ்சுல வச்சிருக்கீங்க. நான் குடியிருக்கிற கோவிலுங்க அது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம கொடுக்குற அன்புக்கு நான் என்ன செய்யப் போறேனு தெரியல. உங்க உடம்புக்கு செருப்பாக தச்சு போட்டா கூட ஈடாகாது.

கொஞ்ச நாளா சோசியல் மீடியால பாக்கறேன். இந்த கோவமெல்லாம் வேணாம். யார் மனசையும் புண்படுத்த வேண்டாம். நமக்கு நிறைய வேலைகள் இருக்கு. வீட்டுல அப்பாவ அடிக்கிற புள்ள என்ன பண்ணும். அது மாதிரி நினைச்சு விட்ருங்க. காந்தி சொல்ற மாதிரி தான், அகிம்சை தான் மிகப்பெரிய ஆயுதம்.

ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க. அந்த காட்டுல காக்கா, கழுகு, முயல், மான் என எல்லாமே இருக்கு. (ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்) காட்டுல இதெல்லாம் இருக்கும்ல, அதுக்கு சொன்னேன் பா. இந்தக் காட்டுக்கு வேட்டைக்கு சிலர் போறாங்க. வேல் வச்சுருக்கிறவர் முயலுக்கு குறி வைக்கிறார். இன்னொருத்தர் யானைக்கு குறி வைக்கிறார். இதுல யார் மாஸ் தெரியுமா? யானைக்கு குறி வச்சவர் தான் மாஸ். கைக்கு கிடைக்கிறது இல்லாம பெருசா குறி வச்சிருக்காருல்ல. அது மாதிரிதான் பெரிய விஷயங்களுக்கு ஆசைப்படணும். ஆசைப்படுறதுல என்னங்க தப்பு. வீட்டுல குட்டி பையன் ஒருத்தன் அவங்க அப்பாவோட சட்டையை போட்டுக்குவான். அப்பா மாதிரி ஆகனும்னு கனவு காணுறான்.

பாட்டு ரிலீஸ் ஆகி ரெண்டு லைன் கட் ஆச்சு. விரல் இடுக்குல ஒரு வரி. அதை ஏன் சிகெரட்ன்னு நினைக்கிறீங்க. அதுல தீர்ப்பை மாத்தி எழுதுற பேனாவாக கூட இருக்கலாம். அண்டால குடுக்கிறது கூழாக கூட இருக்கலாம். இது மாதிரி மலுப்பல் பதில் நான் சொல்லலாம். நீங்கள் சினிமாவை, சினிமாவா மட்டும் பாருங்க. ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கு தேவையான விஷயங்கள் வச்சாலும், அதெல்லாம் நீங்க எடுத்துக்க மாட்டீங்கனு எனக்கு தெரியும். ஸ்கூல், காலேஜ் பக்கத்துல தான் ஒயின் ஷாப் இருக்கு. அவுங்க என்ன அடிச்சுட்டா போறாங்க? அவங்க ரொம்ப தெளிவு. என் படம் நல்லா இல்லைனா போயிடுறாங்க. அவ்வளவு தான்.

ஒருதடவை ஏ.வி.எம்.சரவணன், வடபழனியில் ஒருத்தவருக்கு உதவி செஞ்சுருக்காரு. அப்போ அந்த ஆளு, ‘நன்றி எம்.ஜி.ஆர்.னு சொன்னாங்களாம். யார் உதவி பண்ணினாலும் அது எம்.ஜி.ஆர். பண்ணினதுனு நினைக்கிறாங்க. எனக்கு ஒரு ஆசை வருங்காலத்துல இது மாதிரி உதவி பண்றது நம்ம பசங்க தான்னு சொல்லணும் எல்லோரும் சொல்லணும்.

2026 குறித்து விஜய் கூறியது என்ன?

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சித் தொகுப்பாளர் 2026-ம் ஆண்டு குறித்து கேள்வி எழுப்ப, நடிகர் விஜய்யோ, “என்ன உலகக் கோப்பையா?” என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார். பின்னர் அவரே தொடர்ந்து, “கப்பு முக்கியம் பிகிலு” என்று குறிப்பிட ரசிகர்களின் ஆரவாரம் அடங்க வெகுநேரமானது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் பேச்சு குறித்த ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. நடிகர் விஜய்யின் பேச்சு மற்றும் குட்டி ஸ்டோரியை கேட்டு லியோ படத்தை பார்த்ததை விட இரட்டிப்பு சந்தோஷத்தில் இருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.