சந்தீப் கிஷான் நடித்துள்ள 'மைக்கேல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சந்தீப் கிஷான் நடித்துள்ள ‘மைக்கேல்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

‘புரியாத புதிர்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், சந்தீப் கிஷான் மற்றும் திவ்யன்ஷா கவுசிக் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மைக்கேல்’. கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கரண் புரொடக்சன்ஸ் மற்றும் ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கிறார். கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்கிறார். சத்திய நாராயணன் படத்தொகுப்பு செய்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ‘மைக்கேல்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ‘மைக்கேல்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 3-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.