'சந்திரமுகி 2' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு..!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் முன்னதாக இன்று கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு அவர் ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘ஸ்வாகதாஞ்சலி’ என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

சைதன்யா பிரசாத் எழுதியுள்ள இந்த பாடலை ஶ்ரீநிதி திருமலா பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.