சந்திரமுகியாக கங்கனா ரனாவத் - படக்குழு வெளியிட்ட பர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத்தின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

சமீபத்தில் படக்குழு ‘வேட்டையன் ராஜா’ கதாபாத்திரத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டது. வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸ் இருக்கும் அந்த போஸ்டர் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தற்போது படத்தில் கங்கனா ரனாவத்தின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

முதல் பாகத்தில் நடிகை ஜோதிகா நடித்திருந்த ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. மனதை மயக்கும் அழகியாக கங்கனா ரனாவத் இடம்பெற்றுள்ள இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.