கிங் ஆப் கோதா - சினிமா விமர்சனம்
நடிகர்: துல்கர் சல்மான் நடிகை: ஐஸ்வர்யா லட்சுமி  டைரக்ஷன்: அபிலாஷ் ஜோஷி இசை: ஜேக்ஸ்பிஜாய் ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி

கோதா நகரத்தில் தாதாவாக வலம் வருகிறார் துல்கர் சல்மான். அவருக்கு நண்பர் சபீர் கல்லரக்கல் உதவியாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் துல்கர் சல்மானுக்கு தெரியாமல் சபீர் கல்லரக்கல் எதிர் அணி கூட்டாளியுடன் சேர்ந்து கஞ்சா தொழில் செய்கிறார்.

அதனால் ஆத்திரமடையும் துல்கர் சல்மான் நண்பனை புரட்டி எடுப்பதோடு தாதா தொழிலுக்கு கும்பிடு போட்டுவிட்டு கோதா நகரத்தை விட்டு வெளியூர் சென்று விடுகிறார்.

அதன் பிறகு கோதா நகரத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும் சபீர் கல்லரக்கல் அத்துமீறல்களையும், அட்டகாசங்களையும் செய்து மக்களின் நிம்மதியை கெடுக்கிறார். சபீர் கல்லரக்கலின் கூட்டத்தை அடக்குவதற்காக துல்கர் சல்மானை மீண்டும் கோதா நகரத்திற்கு வரவழைக்கிறார் போலீஸ் அதிகாரி பிரசன்னா.

வில்லன் கூட்டத்தை துல்கர் சல்மான் அடக்கினாரா என்பது மீதி கதை.

ஹேண்ட்ஸம் ஹீரோவாக வலம் வந்த துல்கர் சல்மானை அழுக்கு முகமாக காண்பித்துள்ளார்கள். அவரும் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். சண்டை காட்சிகளிலும் மாஸ் காட்டியிருக்கிறார்.

நண்பராக வரும் சபீர் கல்லரக்கலுக்கு கவனிக்கத்தக்க வேடம் என்பதால் அவரும் அதை சரியாக கையாண்டுள்ளார்.

கடமையைச் செய்யும் போலீஸ் அதிகாரியாக கவனிக்க வைக்கிறார் பிரசன்னா. தேர்ந்த நடிகர் ஆன செம்பன் வினோத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

ஐஸ்வர்யா லட்சுமி, சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன், நைலா உஷா ஆகியோருக்கு சிறிய வேடம் என்பதால் அவர்களும் முடிந்த அளவுக்கு கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

கோதா நகரத்துக்கு தன் ஒளிப்பதிவு மூலம் நேர்த்தியான வடிவம் கொடுத்திருக்கிறார் நிமிஷ் ரவி.

அதிரடி ஆக்சன் படத்துக்கு தேவையான அழுத்தமான பின்னணி இசை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ்பிஜாய்.

இடைவெளிக்கு பிறகு வரும் தொய்வான சில காட்சிகள், கிளைமாக்ஸ் நெருங்கியும் படம் தொடர்வது என சில குறைகள் இருந்தாலும் ரசிகர்களுக்கு ஆக்சன் படம் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி ஜெயித்திருக்கிறார்.