கதையின் நாயகனாக சமுத்திரக்கனி

`திரு.மாணிக்கம்’ என்ற புதிய படத்தில் கதையின் நாயகனாக சமுத்திரக்கனி நடிக்கிறார்.

சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு `திரு. மாணிக்கம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஶ்ரீமன், கருணாகரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை நந்தா பெரியசாமி டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, “மாணிக்கம் என்ற ஒரு மனிதன், எப்படி திரு. மாணிக்கமாக மாறுகிறான் என்பதே கதை. ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்தில் நேர்மையாக இருக்க முடியுமா, அதற்கான சாத்தியம் இருக்கின்றதா? என்ற கேள்விகளோடு படம் தொடங்குகிறது.

மாணிக்கத்தின் மனைவி அவனுடைய பெரியம்மா, பெரியப்பா, மைத்துனன், மாமியார் இப்படி ஒரு கூட்டமே தனி மனிதன் மாணிக்கத்தை நேர்மையாக இருக்க விடாமல் துரத்துகிறது. கூடவே அராஜகம் பிடித்த போலீஸ்காரர்களும் துரத்து கிறார்கள். இந்தப் போராட்டத்தில் இருந்து மாணிக்கம் எப்படி தப்பித்து நேர்மையான ஒரு காரியத்தை செய்கிறான் என்பதே கதை” என்றார்.

படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இசை: விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு: சுகுமார். இந்தப் படத்தை ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.