கதாநாயகியாக அறிமுகமாகும் சாரா...!

அவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய விஜய் தான் கதாநாயகியாகவும் அறிமுகப்படுத்த இருக்கிறார்

2011-ம் ஆண்டில் வெளியான ‘தெய்வ திருமகள்’ படத்தில் விக்ரமின் மகளாக ‘நிலா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் சாரா. அதனைத்தொடர்ந்து மீண்டும் விஜய் இயக்கத்தில் ‘சைவம்’ படத்தில் சாரா நடித்தார். ‘பொன்னியின் செல்வன்-2’ படத்தில் இளவயது நந்தினியாக நடித்து அட்டகாசப்படுத்தி இருந்தார்.

சமீபகாலமாகவே இணையதளத்திலும் சாரா தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார். இதனால் அவர் கதாநாயகியாக நடிக்க போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தமிழ் சினிமாவில் சாரா கதாநாயகியாக நடிக்க போகிறார்.

‘தெய்வ திருமகள்’ படத்தின் மூலம் அவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய விஜய் தான் கதாநாயகியாகவும் அறிமுகப்படுத்த இருக்கிறார். இதுகுறித்து விஜய் கூறுகையில், ‘பொன்னியின் செல்வன்-2’ படத்தில் மணிரத்னம் சாராவை தெய்வீக அழகுடன் சித்தரித்துவிட்டார். இனி சாரா தைரியமாக ஹீரோயினாக நடிக்கலாம். அவரை நான் 2025-ம் ஆண்டு தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த இருக்கிறேன் என்றார்.

விஜய் தற்போது அருண் விஜய் நடிப்பில் ‘மிஷன்: சேப்டர்-1’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.